ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் தனது நீண்டதூர ட்ரோன் தாக்குதல் உத்திகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ‘ஒசோன்’ (Ozon) மற்றும் ‘வைல்ட்பெர்ரீஸ்’ (Wildberries) ஆகியவற்றின் பிரம்மாண்டமான சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து உக்ரைன் தொடர்ந்து 3-வது நாளாகத் தீவிர ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் அமேசான் என்று அழைக்கப்படும் இந்த மின்-வர்த்தக நிறுவனங்கள் மீதான தாக்குதலால், பல நூறு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
ரஷ்யாவின் கிராஸ்னோடார், அடிகேயா குடியரசு, ஸ்டாவ்ரோபோல் மற்றும் தாகெஸ்தான் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஒசோன் நிறுவனத்தின் விநியோக மையங்கள் மீது இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதலின் போது ட்ரோன்களின் இடிபாடுகள் விழுந்ததில் பல கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன. ரஷ்ய பாதுகாப்புப் படைகள் பல ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்த போதிலும், கிடங்குகளில் ஏற்பட்ட பெரும் தீயைக் கட்டுப்படுத்தத் தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
போர் முனையில் மட்டுமல்லாது, ரஷ்ய நாட்டின் பொருளாதார உள்கட்டமைப்புகளையும் விநியோகச் சங்கிலியையும் முடக்குவதையே உக்ரைன் தனது முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. ரஷ்ய மக்கள் போரின் நேரடிப் பாதிப்புகளை உணரும் வகையில், அந்நாட்டின் வர்த்தக மையங்கள் மற்றும் தளவாடக் கிடங்குகள் மீது ‘எஃப்.பி-1’ (FP-1) ரக நீண்டதூர உக்ரைனிய ட்ரோன்கள் மூலம் இந்த அதிநவீனத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக உக்ரைனிய படைப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்த ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் பல பகுதிகளில் வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யப் படைகள் உக்ரைனிய நகரங்கள் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, ரஷ்யாவின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைத்துத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.