உக்ரைன் தலைநகர் கெய்வின் மையப்பகுதியில் அந்நாட்டின் முக்கிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ‘எஸ்.பி.யு’ (SBU) மற்றும் ராணுவ புலனாய்வு அமைப்பான ‘ஜி.யு.ஆர்’ (GUR) ஆகிய இரு உளவு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இடையே பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சொந்த நாட்டுப் பாதுகாப்புப் படைகளே நடுரோட்டில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, இது “முற்றிலும் அவமானகரமானது” (absolutely shameful) என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
க்ரெம்ளின் எதிர்ப்பாளரும், உக்ரைனுக்காகப் போராடும் ‘ரஷ்ய தன்னார்வப் படை’ (RDK) பிரிவின் துணைத் தளபதியுமான ஸ்டெபன் கப்லுனோவ் என்பவர் கடத்தப்பட்டதாக எழுந்த விவகாரமே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அவரை எஸ்.பி.யு அமைப்பினர் விசாரணைக்காகத் தடுத்து வைத்தபோது, அவரை மீட்க ஜி.யு.ஆர் அமைப்பின் ஆயுதமேந்தியப் பிரிவினர் முயன்றதால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, துப்பாக்கிச் சூடாக மாறியது. இந்தத் துப்பாக்கிப் பரிமாற்றத்தில் குறைந்தது 3 அதிகாரிகள் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்துத் உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அதிபர் செலென்ஸ்கி, எஸ்.பி.யு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவரையும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். “உக்ரைனில், ஆக்கிரமிப்பு ரஷ்யப் படைகளுக்கு எதிராக மட்டுமே துப்பாக்கியைப் பயன்படுத்த அனுமதி உண்டு. வேறு எந்த நோக்கத்திற்காக வீதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதையும் இந்த நாடு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது” எனத் தனது டெலிகிராம் பதிவில் செலென்ஸ்கி மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் இக்கட்டான சூழலில், நாட்டின் முன்னணி இரு உளவு அமைப்புகளுக்கு இடையே நிலவும் உட்கட்சிப் பூசலும் ஒருங்கிணைப்பின்மையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் சட்ட அமலாக்கத் துறைக்கும் புலனாய்வுத் துறைக்கும் இடையிலான இந்த பகிரங்க மோதல் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.