மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் நவீனப் போர்க்கப்பல்களை இலக்கு வைக்கும் வகையில், அதிவேக ‘சூப்பர்சானிக்’ (Supersonic) ஏவுகணைகளைத் தயாரிக்க ஈரானுக்கு ரஷ்யா இரகசியமாக உதவி வருவதாக சர்வதேசப் புலனாய்வு அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ‘C430L’ என்ற குறியீட்டுப் பெயரில் இயங்கி வரும் இந்த இரகசியத் திட்டத்தின் கீழ், ரஷ்யாவின் முன்னணி ஏவுகணை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஈரானிய ராணுவத்திற்குத் அதிநவீனத் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
2023-ஆம் ஆண்டு முறைப்படி கையெழுத்தான இந்த இரகசிய ஒப்பந்தத்தின் கீழ், ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகமாகப் பாயக்கூடிய ‘ராம்ஜெட்’ (Ramjet) உந்துவிசை அமைப்புகளை மேம்படுத்த ஈரானுக்கு ரஷ்யா உதவி வருகிறது. ஒலியின் வேகத்தை விட மிக வேகமாக, குறைந்த உயரத்தில் பறந்து சென்று இலக்கைத் தாக்கும் இந்த சூப்பர்சானிக் ஏவுகணைகளை அமெரிக்காவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளாலும் ரேடார்களாலும் கண்டறிந்து அழிப்பது மிகவும் கடினம் என்பதால், இது அமெரிக்க கடற்படைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆயிரக்கணக்கான ‘ஷாஹெத்’ (Shahed) தாக்குதல் ட்ரோன்களை வழங்கி ஈரான் உதவி வந்த நிலையில், அதற்குப் பிரதிபலனாகவே ரஷ்யா இந்த உத்திசார் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ஈரானுக்கு மாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான ‘ரோசோபோரோன் எக்ஸ்போர்ட்’ (Rosoboronexport) மற்றும் ஏவுகணை வடிவமைப்பு நிறுவனமான ‘NPO மாஷினோஸ்ட்ரோயேனியா’ ஆகியவற்றின் மூத்த நிபுணர்கள் ஈரானுக்கு நேரடியாகச் சென்று இந்த சோதனைகளை விரைவுபடுத்தியுள்ளனர்.
ஈரான் ஏற்கனவே இந்த புதிய ராம்ஜெட் இன்ஜினை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்துள்ள போதிலும், இந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட ஏவுகணைகள் இதுவரை போர்க்களத்தில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்த ஆபத்தான ராணுவக் கூட்டணி, வளைகுடாப் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்புச் சமநிலையை சீர்குலைக்கும் என சர்வதேச ராணுவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.