Posted in

ரஷ்ய சென் பீட்டர்ஸ்-பேர்க் பற்றி எரிகிறது: உக்ரைனின் அகோர தாக்குதல் !

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உலக நாடுகளுக்குத் தனது பொருளாதாரப் பலத்தைக் காட்டுவதற்காக மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்த சர்வதேச பொருளாதார மாநாடு [SPIEF] தொடங்க இன்னும் சில மணிநேரங்களே இருந்தன. அமெரிக்கா உட்பட சுமார் 76 நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் ரஷ்யாவின் புகழ்பெற்ற சென் பீட்டர்ஸ்பர்க் (St Petersburg) நகரில் குவிந்திருந்த அந்த நள்ளிரவு நேரத்தில், ஒட்டுமொத்த ரஷ்ய பாதுகாப்பு வளையங்களையும் சுக்குநூறாக உடைத்து எறிந்து ஒரு அதிர்ச்சித் தாக்குதலை நடத்தியுள்ளது உக்ரைன் ராணுவம். புதினின் சொந்த மண்ணாகவும், ரஷ்யாவின் Davos என்று அழைக்கப்படும் இந்த மாநாடு நடக்கும் இடத்திலிருந்தும் வெறும் 12 மைல் தொலைவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் துறைமுக முனையத்தை (Oil Port) குறிவைத்து உக்ரைன் இந்த நள்ளிரவு வேட்டையை அரங்கேற்றியுள்ளது.

ஆண்டுக்கு சுமார் 12.5 மில்லியன் டன் எரிபொருளைக் கையாண்டு, ரஷ்யாவின் பொருளாதாரப் பசிக்குத் தீனி போடும் அந்த மாபெரும் எண்ணெய் முனையம், உக்ரைனின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலால் திடீரென நரகமாகக் காட்சியளித்தது. பனி படர்ந்த பின்லாந்து வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இந்தத் துறைமுகம், ரஷ்யாவின் மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு மற்றும் ஏற்றுமதி தளமாகும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ரஷ்யா இன்னும் வலுவாகத்தான் இருக்கிறது என்று உலகிற்குப் பறைசாற்ற புதின் திட்டமிட்டிருந்த அதே வேளையில், அவரது மூக்கிற்கு அடியிலேயே இந்தத் தாக்குதலை நடத்தி உக்ரைன் ஒட்டுமொத்த ரஷ்யாவையும் அதிர வைத்துள்ளது. மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த “நடைமுறை உரையாடல் – நிலையான எதிர்காலத்திற்கான வழி” என்ற வாசகத்தையே இந்தத் கொடூரத் தாக்குதல் முற்றிலும் கேலிப் பொருளாக்கிவிட்டது.

இந்தத் தாக்குதலின் மிக அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படைகள் (Air Defenses), தங்களது நாட்டின் மிக முக்கிய துறைமுகத்தை ஒரு சிறு அச்சுறுத்தலில் இருந்து கூடக் காப்பாற்ற முடியாமல் முற்றிலும் படுதோல்வி அடைந்துள்ளன. உக்ரைன் போரினால் ரஷ்யப் பொருளாதாரம் பெரும் சரிவின் விளிம்பில் இருப்பதாக ஏற்கனவே சர்வதேச வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில், கிரிமியா பகுதியில் உள்ள ரஷ்யக் குடிமக்களும் உயிருக்குப் பயந்து அங்கிருந்து தப்பியோடத் தொடங்கியுள்ளனர். போர்க்களத்தில் உக்ரைன் படைகள் நாளுக்கு நாள் ரஷ்யாவின் புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வரும் சூழலில், ரஷ்யப் பாதுகாப்புப் படையினரின் இந்த மெத்தனப் போக்கு புதினின் ராணுவப் பலத்தை உலக அரங்கில் அசிங்கப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், வாஷிங்டனைச் சேர்ந்த போர்க் கண்காணிப்பு ஆய்வு மையம் (Think Tank) ஒன்று வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலில், உக்ரைன் போர்க்களத்தில் உண்மையில் என்ன நடக்கிறது, ரஷ்யா எவ்வளவு இழப்புகளைச் சந்தித்து வருகிறது என்ற உண்மை விபரங்கள் எதுவும் அதிபர் புதினுக்குச் சரியாகத் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் தொடர்ந்து போர்க்கள நிலவரம் குறித்துப் பொய்யான தகவல்களையே அவரிடம் வழங்கி ஏமாற்றி வருகின்றனர் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. உலகத் தலைவர்கள் முன்னிலையில் புதினின் கௌரவத்தைச் சிதைத்துள்ள இந்தத் துணிச்சலான தாக்குதல், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை அடுத்த கட்ட கொடூரமான சண்டைக்குள் தள்ளியுள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.