Posted in

விஜய் ஆட்சியில் கொல்லப்பட்ட முதல் ஈழத் தமிழ் பெண்.. எங்கே செல்கிறது தமிழகம் ?

அந்த நள்ளிரவு நேரம் அதுவரை சாதாரணமான ஒரு பார்ட்டியாகத்தான் நகர்ந்துகொண்டிருந்தது. சென்னை கோயம்பேட்டின் ஒரு நடன பாரில் மதுவின் போதையில், தாளத்திற்கு ஏற்ப பல இளைஞர் கூட்டங்கள் வெறித்தனமாக ஆடிக் கொண்டிருந்தன. சத்தமான இசை, கண்ணைப் பறிக்கும் விளக்குகள், கைகளில் மதுக்கோப்பைகள் என அனைத்தும் தங்குதடையின்றி நகர்ந்த வேளையில், நடன மேடையில் இரு வேறு குழுக்களுக்கு இடையே திடீரென ஒரு சிறு உராய்வு ஏற்பட்டது. ஆட்டம் பாட்டமாக இருந்த அந்த இடம், அடுத்த சில நிமிடங்களில் ஒருவரையொருவர் முறைத்துப் பார்க்கும் கொடூர மோதல் களமாக மாறியது. சட்டப்பூர்வமாக மது அருந்தும் வயதான 21 கூட நிரம்பாத, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அந்த போதை கும்பலில் கலந்திருந்ததே இந்த விபரீதத்தின் முதல் புள்ளியாக அமைந்தது.

மோதல் முற்றவே, ஆபத்தை உணர்ந்த ஒரு குழுவைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் அங்கிருந்து தப்பித்துத் தங்களது இருசக்கர வாகனத்தில் ஏறி வீட்டை நோக்கிச் அதிவேகமாகப் பறந்தனர். ஆனால், போதையும் ஆத்திரமும் தலைக்கேறிய எதிர்த் தரப்பு கும்பல் அவர்களை அப்படியே விட்டுவிடத் தயாராக இல்லை. தங்களது காரை ஸ்டார்ட் செய்த அந்த கொடூரக் கும்பல், நள்ளிரவுச் சாலையில் அந்தப் பெண்களை நோக்கி ஒரு வேட்டை மிருகத்தைப் போல துரத்தத் தொடங்கியது. எஞ்சினின் கர்ஜனைக்கு நடுவே, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்களின் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் இருந்து காரை மிகக் கொடூரமாக மோதிக் தள்ளியது அந்த கொலை வெறிக் கும்பல்.

சாலையில் தூக்கி வீசப்பட்டவர்களில், இலங்கையைச் சேர்ந்த 18 வயதே ஆன யாழினி (யான்சி) என்ற தமிழ் இளம்பெண், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிர் இழந்தார்! அவருடன் சென்ற மற்றொரு பெண் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு, தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர ரோடு ரேஜ் (Road Rage) கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த சென்னையை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்தையே நடுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து சிஎம்பிடி (CMBT) போலீசார் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையரின் அதிரடி உத்தரவின் பேரில், அந்த பாரின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, கட்டிடம் முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள அரசியல் தலைவர்கள், உரிமமில்லாத பார்களை உடனே மூட வேண்டும் என்றும், பார்களில் நடக்கும் இது போன்ற ஆட்ட பாட்ட கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நடுநிசி மரண வேட்டை, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் இளம் தலைமுறையினரின் கலாச்சாரச் சீரழிவை நோக்கிப் பல அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.