Posted in

அன்று ஆதரவு… இன்று கைது! – மாணவர்கள் மீது தவெக அரசு நடத்திய அடக்குமுறையால் வெடித்த சர்ச்சை!

டெல்லியில் ‘சி.ஜே.பி’ (CJP) அமைப்பின் சார்பிலும், காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையிலும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களுக்கு தவெக அரசம், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யும் ஆதரவு அளிப்பதாகக் கூறி வந்த நிலையில், அதே போராட்டத்திற்கு ஆதரவாகச் சென்னையில் அமைதி வழியில் பேரணி நடத்த முயன்ற மாணவர்களைத் தமிழகக் காவல்துறை கைது செய்து அடைத்து வைத்துள்ளது. தவெக அரசின் இந்த நடவடிக்கை ‘இரட்டை நிலைப்பாடு’ (Double Game) எனப் போராட்டக் குழுவினரும் எதிர்க்கட்சிகளும் கடுமையாகக் சாடி வருகின்றனர்.

நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வி உரிமைகளுக்காக டெல்லியில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அவர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாகச் சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் அண்ணா நகர் பகுதியில் ஒன்று திரண்ட கல்லூரி மாணவர்கள், டெல்லிப் போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கமிட்டு அமைதி ஊர்வலம் செல்ல முயன்றனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

டெல்லியில் மத்திய அரசு மாணவர் போராட்டங்களை அடக்கும் போது அதைக் கண்டித்து அறிக்கை வெளியிடும் முதலமைச்சர் விஜய், தனது சொந்த மாநிலத்தில் அதே கோரிக்கைகளுக்காக அமைதியாகக் குரல் கொடுக்கும் தமிழ்நாட்டு மாணவர்களைக் காவல்துறையைக் கொண்டு ஒடுக்குவது ஏன் என்று மாணவர்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். “தேசிய அளவில் ஜனநாயகக் காவலராகக் காட்டிக் கொள்ளும் தவெக அரசு, மாநிலத்தில் மாணவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக” சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

எதிர்க்கட்சியான திமுக மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல், மாணவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்தும் தவெக அரசின் இந்த அணுகுமுறை அதன் போலித்தனத்தை வெளிப்படுத்துவதாக அவர்கள் விமர்சித்துள்ளனர். மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் தவெக அரசிற்கு எதிராக மீண்டும் போராட்ட அலை வீசத் தொடங்கியுள்ளது.