ஹமாஸ் அமைப்பிற்குச் சொந்தமான அல்-காசம் பிரிகேட்ஸ் (Al Qassam Brigades) ராணுவப் பிரிவுக்கு கிரிப்டோகரன்சி (Cryptocurrency) மூலம் திரட்டப்பட்ட 5,60,000 டாலருக்கும் அதிகமான (இந்திய மதிப்பில் சுமார் ₹4.7 கோடிக்கும் மேல்) டிஜிட்டல் நிதியை அமெரிக்க நீதித்துறை (DOJ) மற்றும் எஃப்.பி.ஐ (FBI) முகமை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன. பயங்கரவாதக் குழுக்களின் நிதியாதாரங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்க அரசு மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் டெலிகிராம் செயலி மற்றும் இணையதளங்கள் வாயிலாகப் ‘பிட்காயின்’ உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்கள் மூலம் ஹமாஸ் அமைப்பு நிதியைத் திரட்டி வந்தது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளைக் கண்டறிவது கடினம் என்ற கூற்றைப் பயன்படுத்தி, சுழற்சி முறையிலான போலி வாலட் முகவரிகள் (Rotating Addresses) மூலம் நிதியை மறைமுகமாகப் பெற்று வந்தனர். இருப்பினும், அமெரிக்க நீதிமன்றங்கள் பிறப்பித்த 5 வெவ்வேறு பிடியாணைகளின் அடிப்படையில், எஃப்.பி.ஐ புலனாய்வு அமைப்பும் பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனங்களும் இணைந்து இந்த நிதிப் பரிவர்த்தனைகளைத் துல்லியமாகக் கண்காணித்துக் கைப்பற்றியுள்ளன.
கிரிப்டோகரன்சிகளைக் கைப்பற்றியது மட்டுமின்றி, ஹமாஸ் அமைப்பு நிதி திரட்டலுக்கும் புதிய நபர்களைச் சேர்ப்பதற்கும் பயன்படுத்தி வந்த முக்கிய இணையதள டொமைன்கள் (Domains) மற்றும் சர்வர்களையும் எஃப்.பி.ஐ தனது முழுப் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், ஹமாஸ் அமைப்பிற்கு டிஜிட்டல் மற்றும் வழக்கமான முறைகளில் பண உதவி செய்ய முயன்ற ஆயிரக்கணக்கான நபர்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் மற்றும் தொடர்பு முகவரிகளை அமெரிக்கப் புலனாய்வுத் துறை சேகரித்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய கொலம்பியா மாவட்ட அமெரிக்க வழக்கறிஞர் ஜனீன் பிரா (Jeanine Pirro), “ஹமாஸ் அமைப்பிற்கு நாங்கள் விடுக்கும் செய்தி ஒன்றுதான்; உங்கள் டிஜிட்டல் வலையமைப்புகள் பாதுகாப்பானவை அல்ல, உங்களின் கிரிப்டோ நிதிகள் எங்களது பார்வைக்குக் தப்ப முடியாது” என எச்சரித்துள்ளார். உலகளவில் பயங்கரவாத அமைப்புகள் கிரிப்டோகரன்சியை நிதி ஆதாரமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அமெரிக்க நீதித்துறை தனது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.