Posted in

4 உலக சாதனைகள்… ஒரே இன்னிங்ஸில் – ஆசிய கோப்பையில் மந்தனாவின் மிரட்டல்

மகளிர் ஆசிய கோப்பை 2026 தொடரில் ஆங்காங் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 64 பந்துகளில் 124 ரன்கள் விளாசி உலக சாதனைகளைப் படைத்துள்ளார். துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் ருத்ரதாண்டவம் ஆடிய அவரது அதிரடி இன்னிங்ஸ் மூலம், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸின் மூலம் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற மெகா சாதனையை மந்தனா தனதாக்கினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் 10,868 ரன்கள் சாதனையை முறியடித்து, சர்வதேச போட்டிகளில் 10,880 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 18-வது சதத்தைப் பதிவு செய்து, ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங்கின் (17 சதங்கள்) சாதனையை முறியடித்து அதிக சதங்கள் அடித்த வீராங்கனையாகவும் புதிய வரலாறு படைத்தார்.

மேலும், ஆசிய கோப்பை வரலாற்றிலேயே தனிநபர் அதிகபட்ச ரன் குவித்த வீராங்கனை என்ற பெருமையையும் மந்தனா பெற்றார். இலங்கை வீராங்கனை சாமாரி அதபத்துவின் (119 ரன்கள்) சாதனையைத் தாண்டி, 124 ரன்கள் விளாசி முதலிடத்தைப் பிடித்தார். மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற தனித்துவமான சாதனையையும் அவர் தனது கணக்கில் சேர்த்துக் கொண்டார்.

போட்டிக்கு பின் பேசிய மந்தனா, “இத்தனை சாதனைகளை நான் படைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை, அணிக்கு பங்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் கூறினார். ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளைத் தகர்த்து கிரிக்கெட் உலகையே மிரள வைத்துள்ள ஸ்மிருதி மந்தனாவிற்குச் விளையாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை மழை போல் பொழிந்து வருகின்றனர்.