ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், போர்நிறுத்தத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க இரு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தலைமையிலான இராஜதந்திரக் குழு இதற்காகத் தெஹ்ரானில் முகாமிட்டுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மோதல் “விரைவில் முடிவுக்கு வரும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ள சூழலில், அமைதிப் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இருப்பினும், ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள ராணுவ முற்றுகை (Naval Blockade) இந்தப் பேச்சுவார்த்தைகளில் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா முழுமையாக முடக்கியுள்ளதற்குப் பதிலடியாக, “அமெரிக்கா தனது முற்றுகையை உடனடியாக விலக்கிக்கொள்ளாவிட்டால், செங்கடல் (Red Sea) வழியிலான சர்வதேசப் போக்குவரத்தை முடக்குவோம்” என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவைத் தாண்டி, சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் செங்கடல் பகுதிக்கும் தங்களது அச்சுறுத்தல் நீளும் என்று ஈரான் கூறியிருப்பது உலகப் பொருளாதாரத்திற்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
ஈரானின் இந்த மிரட்டல் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், “எங்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரும் நரகத்தைச் சந்திப்பார்கள்” (Blown to Hell) என்று தனது பாணியில் எச்சரித்துள்ளார். ஈரானியத் துறைமுகங்களிலிருந்து வெளியேற முயன்ற 9 கப்பல்களை அமெரிக்கக் கடற்படை கடந்த 48 மணி நேரத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. “ஈரானின் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது; எங்கள் துறைமுகங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது” என்று ஈரான் ராணுவத் தளபதி அலி அப்துல்லாஹி தெரிவித்துள்ளார். இந்த ‘முற்றுகைக்கு எதிரான முற்றுகை’ உத்தி சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயரக் காரணமாகியுள்ளது.
தற்போதுள்ள போர்நிறுத்தம் முறிந்தால், செங்கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய இரு முக்கிய வழித்தடங்களும் ஒரே நேரத்தில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் என்பதால், ஐநா சபை மற்றும் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை முற்றுகையைக் தளர்த்தும்படி வலியுறுத்தி வருகின்றன. வரும் இரண்டு நாட்கள் இராஜதந்திர ரீதியாக மிகவும் முக்கியமானவை என்று கருதப்படுகிறது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே, இந்த மிரட்டல்கள் போராக மாறுமா அல்லது அமைதி திரும்புமா என்பது தெரியவரும்.