மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராகக் கடல்சார் முற்றுகைப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கக் கடற்படை வீரர்கள், போதிய உணவின்றிப் பசியால் வாடி வருவதாக வெளியாகி இருக்கும் அதிரடித் தகவல் உலகையே அதிரவைத்துள்ளது. உலகின் மிகவும் பலம் வாய்ந்த ராணுவம் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் USS Tripoli மற்றும் USS Abraham Lincoln போன்ற பிரம்மாண்டப் போர்க்கப்பல்களில், வீரர்களுக்கு அடிப்படை உணவுகூடக் கிடைக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘USA Today’ நாளிதழ் வெளியிட்ட புகைப்படங்கள், இந்தத் துயரத்தை ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
கப்பல்களில் புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் முற்றிலும் தீர்ந்துவிட்ட நிலையில், காய்ந்து போன ஒரு சிறிய துண்டு இறைச்சியும் ரொட்டியும் மட்டுமே வீரர்களுக்கு உணவாக வழங்கப்பட்டு வருகிறது. “உலகின் வலிமையான ராணுவம் நம்முடையது, ஆனால் நம் பிள்ளைகள் பசியால் துடிப்பது நெஞ்சைப் பிளக்கிறது” என்று வீரர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் குமுறி வருகின்றனர். டெக்சாஸைச் சேர்ந்த ஒரு தாய், தன் மகனின் பசியைப் போக்க சுமார் 1.6 லட்சம் ரூபாய் செலவழித்து அனுப்பிய உணவுப் பார்சல்களும் அவர்களைச் சென்றடையவில்லை என்பது வேதனையின் உச்சம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கத் தபால் துறை போர் பகுதிகளுக்கான சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ‘கேர் பேக்கேஜ்கள்’ ராணுவ மையங்களில் முடங்கிக் கிடக்கின்றன. ஈரானுடன் தற்போது இரண்டு வார கால போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், வான்வெளி மற்றும் கடல்சார் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாததால் கப்பல்களுக்குப் புதிய உணவுகளைக் கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. நவீன தொழில்நுட்ப யுகத்தில், ஒரு வல்லரசு நாடு தனது வீரர்களுக்கு உணவு வழங்க முடியாமல் திணறுவது அந்நாட்டின் நிர்வாகத் திறமை மீதான பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஈரான் போர் நீண்டுகொண்டே போனால், வீரர்களின் உடல்நலம் மட்டுமல்லாது மனநலமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என ராணுவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற உணவுத் தட்டுப்பாடுகள் முன்னரும் நிகழ்ந்திருந்தாலும், 2026-ஆம் ஆண்டில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உச்சத்தில் இருக்கும் காலத்திலும் வீரர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காகக் காத்திருப்பது அமெரிக்க ராணுவத்தின் கௌரவத்தைச் சிதைப்பதாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சர்வதேச ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.