வளர்ந்து வரும் விண்வெளிப் போட்டியில் சீனாவுக்கு இணையாக அமெரிக்கா தனது விண்வெளிப் பாதுகாப்புப் படைகளை (Space Force) உடனடியாகப் பலப்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான ‘மிட்செல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஏரோஸ்பேஸ் ஸ்டடீஸ்’ (Mitchell Institute) அண்மையில் எச்சரித்துள்ளது. ஹாலிவுட் திரைப்படப் பாணியில், நிலவு மற்றும் விண்வெளி சுற்றுவட்டப் பாதைகளில் அமெரிக்கா தனது இராணுவப் பாதுகாப்பு வீரர்களான ‘கார்டியன்ஸ்’ (Guardians) எனப்படும் மனிதப் படைகளை இப்போதே உருவாக்கத் தொடங்க வேண்டும் என்று இந்த சிந்தனைக் குழு (Think Tank) ஒரு விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இல்லையெனில், நிலவின் முக்கியப் பகுதிகள் மற்றும் இயற்கை வளங்களைச் சீனா முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உரிமை கோரும் அபாயம் உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற விண்வெளிப் படை கர்னல் கைல் பம்ராய் (Kyle Pumroy) தயாரித்துள்ள இந்த 22 பக்க கொள்கை அறிக்கையில், சீனா தனது விண்வெளித் திட்டங்களை ராணுவ நோக்கங்களுக்காக மிக வேகமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது . பூமியில் தென் சீனக் கடல் மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் சர்வதேச விதிகளை மீறிச் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியதைப் போல, விண்வெளியிலும் ஒரு ‘விண்வெளி பட்டுப் பாதை’ (Space Silk Road) திட்டத்தை உருவாக்கி, நிலவின் வளங்களையும், செயற்கைக்கோள் வழித்தடங்களையும் சீனா தனியொரு நாடாகக் கட்டுப்படுத்த முயல்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2040-ஆம் ஆண்டிற்குள் நிலவில் முழுமையான மனிதக் குடியிருப்புகளை அமைக்கச் சீனா இலக்கு வைத்துள்ளதால் அமெரிக்கா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விண்வெளிப் பாதுகாப்பிற்கு ரோபோக்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்களை மட்டுமே நம்பியிருக்காமல், மனிதர்களின் நேரடி இருப்பு அவசியமானது என்று பம்ராய் தெரிவித்துள்ளார். “இயந்திரங்களால் மனிதர்களின் சமயோசித புத்தி, தீர்க்கமான முடிவு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது” என்பதால், அமெரிக்காவின் விண்வெளிப் படைகளைச் சேர்ந்த வீரர்களை (Guardians) நாசா மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களின் உதவியோடு சர்வதேச விண்வெளி நிலையங்களுக்கு அனுப்பி இப்போதே பயிற்சியளிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கத் தனியாக ஒரு ‘இராணுவ விண்வெளி மனிதப் பயணத் திட்டத்தை’ (Military Human Spaceflight Program) உருவாக்க வேண்டும் என்பதும் இதன் முக்கிய கோரிக்கையாகும்.
1967-ஆம் ஆண்டின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி (Outer Space Treaty), நிலவையோ அல்லது விண்வெளிப் பொருட்களையோ எந்தவொரு நாடும் சொந்தம் கொண்டாடவோ அல்லது அங்கு ஆயுதப் படைகளைக் குவிக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சீனா இந்த ஒப்பந்தங்களை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட வாய்ப்புள்ளதால், அமெரிக்கா அந்த ஒப்பந்த விதிகளுக்கு அப்பாற்பட்டுத் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக வேண்டும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது. அமெரிக்காவின் ‘ஆர்டெமிஸ்’ (Artemis) நிலவுப் பயணம் பல்வேறு தாமதங்களைச் சந்தித்து வரும் வேளையில், இந்த புதிய விண்வெளிப் போர் அச்சுறுத்தல் அறிக்கை உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.