சில வாரங்களுக்கு முன்னர் ,இந்தியாவில் நடைபெற்ற கடற்படை பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த ஈரான் போர்க்கப்பலை வழிமறித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், கொடூரமான டார்பிடோ (Torpedo) தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த கோரத் தாக்குதலில் போர்க்கப்பல் சிதைந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஈரான் வீரர்கள் கடலில் மூழ்கிப் பலியான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுமார் 200 ஈரான் கடற்படை வீரர்களை இலங்கை கடற்படையினர் அதிரடியாகச் செயல்பட்டு மீட்டனர். மீட்கப்பட்ட வீரர்கள் இலங்கையில் ரகசியமான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஒருபுறம் வல்லரசு நாடான அமெரிக்கா, மறுபுறம் நட்பு நாடான ஈரான் என இரு தரப்பிற்கும் இடையே சிக்கிக்கொண்ட இலங்கை அரசு, இந்த விவகாரத்தில் மிகவும் நுணுக்கமாகக் காய்களை நகர்த்தியது.
ஆரம்பத்தில் இந்த வீரர்களைத் தாய்நாட்டிற்கு அனுப்ப இலங்கை அரசு தயக்கம் காட்டிய நிலையில், சர்வதேச அரங்கில் பெரும் அரசியல் அழுத்தம் நிலவியது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் இப்போது தெற்காசியப் பகுதிக்கும் பரவியுள்ளதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம், இந்த இக்கட்டான சூழலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த 200 வீரர்களும் சிறப்பு விமானம் மூலம் அவசர அவசரமாகத் தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வல்லரசு நாடுகளின் மோதலில் ஒரு சிறிய நாடான இலங்கை, தனது ராஜதந்திரத்தால் இந்தச் சிக்கலைச் சுமூகமாக முடித்துள்ளது. ஆனாலும், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதல், ஆசியப் பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரும் போர் வெடிக்கலாம் என்பதையே காட்டுகிறது.