Posted in

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்கக் கூடாது; புதிய அரசுக்கு வைகோ விடுத்துள்ள எச்சரிக்கை!

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (மே 21, 2026) விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழகத்தின் மொழிப் போராட்ட வரலாற்றை உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார். 1938-இல் தொடங்கி 1965-இல் மொழிப் புரட்சியாக வெடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சின்னச்சாமி, அரங்கநாதன், விராலிமலை சண்முகம் உள்ளிட்ட தியாகிகள் நெருப்பின் நாக்குகளுக்குத் தங்களது இன்னுயிரை ஈந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மொழிப் போராட்ட உலைக்களத்தின் விளைவாகவே 1967-இல் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார் என்றும், அவர் மரணத்தின் விளிம்பில் நின்றபோது கூட, “தமிழும் ஆங்கிலமும் மட்டும்தான் இருமொழிக் கொள்கை; தமிழ்நாட்டில் இனி எந்நாளும் இந்திக்கு இடமில்லை” எனப் பிரகடனம் செய்ததை வைகோ தனது அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தீர்க்கதரிசன முடிவை அதற்குப் பின் வந்த அனைத்து தமிழக அரசுகளும் இன்று வரை உறுதியோடு கடைப்பிடித்து வருவதை வைகோ விவரித்துள்ளார். ஆனால், மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு, தற்போது ‘பி.எம்.ஸ்ரீ’ என்ற புதிய பள்ளித் திட்டத்தின் மூலமாக மும்மொழிக் கொள்கையையும், மறைமுக இந்தித் திணிப்பையும் தமிழ்நாட்டிற்குள் புகுத்த மூர்க்கத்தனமாக முனைகிறது என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார். மத்திய அரசின் இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால், அது இந்தியை எதிர்ப்பதற்காகத் இரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு இழைக்கும் மிகப்பெரிய பச்சைத் துரோகமாகிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்குத் தனது கோரிக்கையை முன்வைத்துள்ள வைகோ, “இங்கு அமைந்துள்ள புதிய அரசின் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் கூறியது தமிழ் உணர்வாளர்களுக்குப் பெரும் ஆறுதலையும் ஊக்கத்தையும் தந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். லட்சோப லட்சம் இளைஞர்களும், மாணவர்களும் தவெக அரசின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டு உழைத்திருப்பதை நினைவூட்டிய அவர், இந்த அரசு மக்கள் அரசாகத் திகழ வேண்டுமானால் மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் நிதியுதவிகளைப் பெறுவதற்காகப் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திடக் கூடாது என்றும், அத்தகைய உறுதியான முடிவை எடுக்கும் பட்சத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்த அரசுக்கு அரணாகத் தோள் கொடுப்பார்கள் என்றும் வைகோ உறுதியளித்துள்ளார். தமிழகத்தின் இருமொழிக் கொள்கைப் பாரம்பரியத்தை மாற்றுவதற்குப் பாஜாக மற்றும் அதன் கூட்டணித் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வரும் வேளையில், வைகோவின் இந்த அதிரடி அறிக்கை, புதிய தவெக அரசு தனது மொழிக் கொள்கை நிலைப்பாட்டில் மேலும் உறுதியாகச் செயல்படுவதற்கான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது.