மதுரையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களைக் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரே வாரத்தில் 3 கொலைகள் மற்றும் கல்லூரி மாணவர் மீது நடத்தப்பட்ட வெட்டுச் சம்பவங்கள் குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ள அவர், முதல்வர் விஜய் நடித்த திரைப் பாடலை மாற்றியமைத்துச் சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம் மாமதுரையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கொடூரக் கொலைகள் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. அதனைத் தொடர்ந்து, நடப்பு வாரத்தின் முதல் நாளிலேயே அலங்காநல்லூர் பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் மீது மர்ம நபர்கள் அரிவாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய செய்தி வெளியானது. ஆன்மீகக் கும்பாபிஷேகம் கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரையின் தற்போதைய நிலை இதுதானா எனக் கேள்வி எழுப்பியுள்ள வானதி சீனிவாசன், சட்டம் ஒழுங்கு சீரழிந்து காணப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்துத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலமைச்சர் விஜய் முன்னதாகத் திரைத் துறையில் நடித்திருந்த புகழ்பெற்ற பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி, “மதுரைக்குப் போக மாட்டேன், அருவா கத்தி பயமுறுத்தும்” என்றுதான் பாடத் தோன்றுகிறது என நகைமுரணாக விமர்சித்துள்ளார். மேலும், குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், தமிழகத்தில் எப்போதுதான் அமைதியும் பாதுகாப்பும் திரும்பும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு நிர்வாகமும் காவல்துறையும் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியின்கீழ் நடைபெறும் குற்றச்சம்பவங்களைச் சுட்டிக்காட்டி பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் முன்வைத்துள்ள இந்த விமர்சனம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் உருவாக்கியுள்ளது.