விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தோல்வியடைந்துள்ளார். ஆரம்பம் முதலே இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் தேமுதிக இடையே கடும் போட்டி நிலவியது. 10-வது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் பி. செல்வம் முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த சுற்றுகளில் அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது. இறுதியில், தவெக வேட்பாளர் பி. செல்வம் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இதே விருதுநகரில் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட விஜய பிரபாகரன், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுத் தனது அரசியல் பயணத்தை வலுவாகத் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காகத் தொகுதி முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும், ‘மாற்றத்தை’ விரும்பிய வாக்காளர்கள் தவெக-வின் பக்கம் சாய்ந்துள்ளனர். விஜயகாந்தின் சொந்த மாவட்டமான விருதுநகரிலேயே அவரது மகனுக்குக் கிடைத்துள்ள இந்தத் தோல்வி, தேமுதிக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது. ராஜபாளையத்தில் தவெக வேட்பாளர் ஜெகதீஸ்வரி, திமுக-வின் இரண்டு முறை எம்.எல்.ஏ-வான தங்கப்பாண்டியனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதேபோல், சாத்தூர் தொகுதியில் ஒன்பது முறை எம்.எல்.ஏ-வாக இருந்த திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை, தவெக-வின் கார்த்திக் குமார் தோற்கடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளை தவெக கைப்பற்றி, திராவிடக் கட்சிகளின் கோட்டையைத் தகர்த்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய பிரபாகரன் தோல்வியுற்றது உறுதியானதும், தவெக தொண்டர்கள் விருதுநகர் நகர் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். “எங்கள் தலைவன் விஜய்யின் சொல்லுக்குக் கிடைத்த வெற்றி இது” என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருப்பினும், திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டும் திருச்சுழி தொகுதியில் கடும் போராட்டத்திற்குப் பிறகு தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது அக்கட்சிக்கு ஒரு சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது. விஜய பிரபாகரனின் இந்தத் தோல்வி, தேமுதிக தனது அரசியல் வியூகங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.