விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் கிராமத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்டு, பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை, அதிகாரிகள் பூசணிக்காய் உடைத்துத் திருஷ்டி சுற்றி மீண்டும் திறந்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
நகரப் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மயிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நடுவனந்தல் கிராமத்திற்கு இடமாற்றம் செய்ததற்கு அப்பகுதிப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தப் பிரச்சனை குறித்துச் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் காரசாரமாகப் பேசி, குடியிருப்பு மற்றும் பள்ளிப் பகுதிகள் நிறைந்த கிராமப் பகுதியில் செயல்படும் இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சனை எதிரொலித்ததைத் தொடர்ந்து, சில நாட்கள் நடுவனந்தல் டாஸ்மாக் கடை தற்காலிகமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகக் கிராம மக்கள் கருதிய நிலையில், திடீரென அங்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், கடையின் வாசலில் எலுமிச்சம்பழம் மற்றும் பூசணிக்காய் உடைத்துத் திருஷ்டி கழித்து, பூட்டைத் திறந்து மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
சட்டமன்றத்திலேயே மக்கள் பிரதிநிதி குரல் கொடுத்த பிறகும், அதிகாரிகளின் துணையோடு ஆன்மீகச் சடங்குகளைச் செய்து டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்திருப்பது கிராமப் பெண்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. கடையை உடனடியாக நிரந்தரமாக இடமாற்றம் செய்யாவிட்டால், கிராம மக்களைத் திரட்டிப் பெருந்திரள் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.