உக்ரைன் உடனான போர் பல ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் வேளையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) தனக்கு எதிராகத் தீட்டப்படும் ரகசியக் கொலைச் சதி மற்றும் ராணுவப் புரட்சிக்கு அஞ்சி, சொகுசு பதுங்கு குழி அரண்மனைகளில் (Bunker Palaces) தஞ்சமடைந்துள்ளதாக ஐரோப்பிய உளவுத்துறை நிறுவனங்களின் ரகசிய அறிக்கைகள் தற்பொழுது அம்பலப்படுத்தியுள்ளன. தனது சொந்த நாட்டின் அரசியல் மேல்தட்டு வர்க்கத்தினரே (Political Elite) தன்னைத் தீர்த்துக்கட்டக் கூடும் என்ற உச்சக்கட்டப் பயத்தில், தனது தனிப்பட்ட பாதுகாப்புப் படையான எஃப்எஸ்ஓ (FSO – Federal Protective Service) பிரிவில் அதிரடியாக 800-க்கும் மேற்பட்ட புதிய உயர் அதிகாரிகளை இணைத்துத் தனது பாதுகாப்பு வளையத்தை புதின் அசுர வேகத்தில் பலப்படுத்தியுள்ளார்.
சமீபகாலமாக ரஷ்யாவின் முக்கிய ஏவுகணை வடிவமைப்பாளர்கள், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் போன்ற டாப் ராணுவப் தளபதிகள் அடுத்தடுத்து கார் குண்டு வெடிப்பு மற்றும் வான்வெளித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கிரெம்ளின் (Kremlin) மாளிகை கடுமையான அதிர்ச்சியில் உறைந்துள்ளது. குறிப்பாக, உக்ரைனின் நவீன ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யப் படைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் புதினின் தனிப்பட்ட பாதுகாப்புக் குறித்த அச்சத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, மாஸ்கோ ஆற்றில் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்கச் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.
உளவுத்துறையின் ரகசியத் தரவுகளின்படி, புதின் தற்பொழுது மாஸ்கோ மற்றும் வால்டாயில் உள்ள தனது வழக்கமான அதிகாரப்பூர்வ இல்லங்களுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்த்து வருகிறார். அதற்குப் பதிலாக, கிராஸ்னோடர் (Krasnodar) பிராந்தியத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள நிலத்தடி பதுங்கு குழி அரண்மனையில் பல வாரங்களாகத் தங்கி, அங்கிருந்தபடியே போரை ‘மைக்ரோமேனேஜ்’ (Micromanage) செய்து வருவதாகக் கூறப்படுகிறது. புதின் இன்னும் மாஸ்கோவிலேயே சாதாரணப் பணிகளை மேற்கொண்டு வருவது போன்ற ஒரு மாயையை உருவாக்க, ரஷ்ய அரசு ஊடகங்கள் அனைத்தும் அவர் முன்னரே பதிவு செய்த பழைய வீடியோக்களை (Pre-recorded footage) தற்பொழுது ஒளிபரப்பி வருகின்றன.
அதிபர் புதினின் இந்த அதீத பயம் (Paranoia) அவரது சமையல்காரர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் மெய்க்காப்பாளர்கள் வரை ஒட்டுமொத்த இன்னர் சர்க்கிள் ஊழியர்களையும் தற்பொழுது வாட்டி வதைத்து வருகிறது. புதினின் அருகே பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வீடுகளில் ரகசியக் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், புதினைச் நேரில் சந்திக்க வரும் எவராக இருந்தாலும், அவர்கள் இரண்டு அடுக்கு தீவிர உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதோடு, இணைய வசதி இல்லாத சாதாரண மொபைல் போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கடுமையான விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு வல்லரசுத் தலைவர், தற்பொழுது தனது சொந்த விசுவாசிகளையே சந்தேகக் கண்ணோடு பார்த்துப் பதுங்கு குழிக்குள் முடங்கியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.