ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் (DRC) அண்மையில் பரவத் தொடங்கிய ‘புந்திபுகியோ’ (Bundibugyo) ரக எபோலா வைரஸ் பாதிப்பு, சர்வதேச அளவில் பெரும் பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சுமார் 900-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு நூற்றுக்கணக்கானோருக்குப் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக எபோலா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 116 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) நிம்மதியளிக்கும் புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர், காங்கோவில் தற்போதைய நிலவரப்படி 321 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் கொடிய வைரஸ் பாதிப்பால் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 பேர் தீவிர சிகிச்சைக்குப் பின் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். முன்னதாக ஆப்பிரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Africa CDC) ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய தரவு திருத்தம் சர்வதேச மருத்துவ உலகிற்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய வழக்குகளின் எண்ணிக்கை இவ்வளவு பெரிய அளவில் திடீரெனக் குறையக் காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த லிண்ட்மேயர், “ஆரம்பக் கட்ட கண்காணிப்பின் போது சாதாரண காய்ச்சல் மற்றும் இதர வைரஸ் பாதிப்புகள் இருந்த நூற்றுக்கணக்கான மக்களும் எபோலா அறிகுறிப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர்; ஆனால், முறையான மருத்துவ ஆய்வக சோதனைகளுக்குப் பின் அவர்களுக்கு எபோலா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது” என்று விளக்கமளித்தார். தற்போதைய புந்திபுகியோ எபோலா வைரஸ் ரகத்தைக் கண்டறிவதில் தொடக்கத்தில் சோதனைக் கருவிகளில் (Testing Kits) சவால்கள் நீடித்ததே இந்த எண்ணிக்கைக் குழப்பத்திற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காங்கோவின் அண்டை நாடான உகாண்டாவிலும் (Uganda) இந்த எபோலா வைரஸ் பரவியுள்ள சூழலில், அங்கு இதுவரை 15 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார். எபோலா பரவலைத் தடுக்க உகாண்டா அரசு தற்காலிகமாகத் தனது எல்லைகளை மூடியுள்ள நிலையில், இத்தகைய எல்லை மூடல்கள் சட்டவிரோதப் போக்குவரத்தை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சர்வதேசக் குடியேற்ற அமைப்பு (IOM) எச்சரித்துள்ளது. தற்போதைக்குத் தொற்றுப் பாதிப்பு குறைந்திருப்பது போலத் தோன்றினாலும், புந்திபுகியோ ரக எபோலாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் (Vaccines) எதுவும் இல்லாததால், காங்கோ மற்றும் உகாண்டா எல்லைப் பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் தொடர்ந்து தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.