தமிழக இயற்கை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ரூ.1 கோடி அவதூறு வழக்கிற்கு, பிரபல யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நையாண்டியாகப் பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதான வழக்கை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இழப்பீட்டுத் தொகையை கிண்டல் செய்யும் விதமாகப் பதிவிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான டி.கே. பிரபு, சட்டவிரோதச் சுரங்கங்களைத் தடுத்து நற்பெயருடன் பணியாற்றி வரும் வேளையில், மாரிதாஸ் தனது யூடியூப் மற்றும் எக்ஸ் பக்கங்களில் தனக்கு எதிராக முற்றிலும் உண்மைக்கு மாறான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்கிட உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி, வழக்கைப் பதிவு செய்து எண்களிட்டு விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு அனுமதி உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக அவதூறு வீடியோக்கள் வெளியான கூகுள் எல்.எல்.சி (Google LLC), யூடியூப் இந்தியா மற்றும் எக்ஸ் கார்ப்பரேஷன் (X Corp) ஆகிய சமூக வலைதள நிறுவனங்களையும் பிரதிவாதிகளாகச் சேர்த்து வழக்கைப் பதிவு செய்ய நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த அனுமதி குறித்த செய்தி ஊடகங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே, மாரிதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “வரவேற்கத்தக்க முடிவு… என்ன கேட்கும் போது ஒரு 10 கோடியா கேட்டிருக்கலாம்…” என நையாண்டியாகப் பதிவிட்டுள்ளார். “கேட்கும் போதே பெருசா கேட்கணும்” என்ற தொனியில் அமைச்சர் பிரபுவின் மானநஷ்ட வழக்கைக் கேலி செய்து மாரிதாஸ் வெளியிட்டுள்ள இந்த அதிரடிப் பதில், தமிழக அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் காரசார விவாதத்தைக் கிளப்பியுள்ளது.