மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற கொடூரத் துப்பாக்கிச் சண்டையில், ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) போதைப்பொருள் கார்ட்டெல் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தனது தாய்மாமாவுடன் சேர்ந்து போரிட்ட 15 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கும்பல்கள் சிறுவர்களைக் கூலிப்படை கொலையாளிகளாக (Child Hitmen) மாற்றும் கொடூரமான நிஜ முகத்தை இச்சம்பவம் மீண்டும் தோலுரித்துக் காட்டியுள்ளது.
மெக்சிகோவின் மைச்சோகன் (Michoacán) பிராந்தியத்தில், எதிர்த்தரப்பு கார்ட்டெல் கும்பல் மற்றும் ராணுவப் படையினரை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலின் போது, ராணுவத்தின் எதிர்தாக்குதலில் 15 வயதான அந்தச் சிறுவனும், அவனது தாய்மாமாவான கார்ட்டெல் தளபதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ‘எல் சீக்காஃரியோ’ (El Sicario) எனப்படும் இளம் கூலிப்படையாகச் செயல்பட்ட அந்தச் சிறுவன், அதிநவீன தானியங்கி ஏகே-47 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி எதிரிகளை நோக்கித் தோட்டாக்களைப் பொழிந்ததாக மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
மெக்சிகோவில் நிலவும் வறுமை, குடும்பச் சூழல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கலாச்சாரம் காரணமாக, கார்ட்டெல் தலைவர்கள் தங்களது சொந்த குடும்பத்துச் சிறுவர்களையே 12 அல்லது 13 வயதிலேயே ஆயுதம் ஏந்திய கூலிப்படைகளாகப் பயிற்சி அளித்து வளர்த்து வருகின்றனர். போதைப்பொருளுக்கு அடிமையாக்கப்பட்டு, வாரத்திற்கு சொற்பத் தொகையைக் கூலியாகப் பெற்றுக்கொண்டு எதிரிகளைக் கடத்துவது, படுகொலை செய்வது போன்ற கொடூரக் குற்றங்களில் இந்தச் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளைக் கவலையடையச் செய்துள்ளது.
சமீபகாலமாக மெக்சிகோ ராணுவம் போதைப்பொருள் கார்ட்டெல் தலைவர்களைக் குறிவைத்து தீவிர வேட்டையை நடத்தி வரும் சூழலில், இளம் சிறுவர்களைக் கேடயமாகவும் கூலிப்படைகளாகவும் கார்ட்டெல்கள் பயன்படுத்தி வருகின்றன. 15 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் யுத்தத்தில் தனது சொந்த மாமாவுடனேயே பலியான இச்சம்பவம், மெக்சிகோவில் சிறுவர்களின் எதிர்காலமும் உயிர்களும் குற்றப் பின்னணி கலாச்சாரத்தால் எந்தளவுக்குப் பலிகடா ஆக்கப்படுகின்றன என்பதைப் பறைசாற்றுவதாக உலக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.