Posted in

3 நாட்கள் போர் நிறுத்தம்: அமைதி பேச்சுக்கு மாஸ்கோ வந்த அமெரிக்க குழு

உக்ரைன் தலைநகர் கீவ் மீது அடுத்த 3 நாட்களுக்கு எந்தவிதமான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தக் கூடாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது ராணுவத்திற்குத் திடீர் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய அமைதித் திட்ட முன்மொழிவுகளுடன், டிரம்பின் சிறப்புத் தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் மாஸ்கோ வந்தடைந்துள்ள நிலையில் இந்த தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் குழுவின் பாதுகாப்பான வருகை மற்றும் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கும் நோக்கில், செப்டம்பர் 5 நள்ளிரவு முதல் இந்த 3 நாள் தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாகக் கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, அமெரிக்கத் தூதர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு உக்ரைன் தரப்பும் தற்காலிக வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவதாகக் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தே, ரஷ்யாவும் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளது.

மாஸ்கோவின் அரசு விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரை ரஷ்ய அதிபரின் சிறப்புப் பிரதிநிதி கிரில் டிமிட்ரீவ் நேரில் வரவேற்றார். அதிபர் விளாடிமிர் புடினை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அமெரிக்கக் குழு, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டொனால்ட் டிரம்பின் புதிய வரைவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளது. மாஸ்கோ சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமையன்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்று அதிபர் செலன்ஸ்கியையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து நீடித்து வரும் உக்ரைன்-ரஷ்யப் போரில், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா முன்னெடுக்கும் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றும் வரை எல்லையில் முழுமையான போர் நிறுத்தம் சாத்தியமில்லை என ரஷ்யா கூறி வருவதால், அமெரிக்கத் தூதர்களின் இந்த அமைதிப் பயணம் எந்தளவுக்கு வெற்றியைத் தரும் என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.