கடந்த வருடத்தில் மாத்திரம் 28,158 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைவில்லைகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. கடற்படை, பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் ஊடாக இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக பொருட்களை கொண்டுசெல்லுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு பிரஜைகள் 407 பேர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதனிடையே, கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக இவ்வருடத்தில் இலங்கை கடற்படை தேசிய கடல்சார் அபிலாஷையை அடைவதற்கான புதிய மூலோபாயத் திட்டத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகவிருப்பதாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.