டொராண்டோ: கடந்த 10 ஆண்டுகளாகக் கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ருடோ நேற்றைய தினம் பதவி விலகினார். அவர் பதவி விலக உண்மையில் என்ன காரணம்.. ஒரு காலத்தில் கனடா நாட்டு மக்கள் விரும்பும் தலைவராக இருந்த ஜஸ்டின் ட்ருடோவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மொத்தமாகத் திரும்பியது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கனடா நாட்டின் பிரதமராகக் கடந்த 2015 நவ. மாதம் முதலில் பொறுப்பேற்றார் ஜஸ்டின் ட்ரூடோ. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாகவே அவரே தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து வருகிறார்.
ஜஸ்டின் ட்ரூடோ: ஆனால், சமீப நாட்களாக ஜஸ்டின் ட்ரூடோ மீதான கோபம் அங்கு அதிகரித்தே வந்தது. இதனால் வேறு வழியின்றி அவர் நேற்று தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் இந்தளவுக்குக் கோபத்தில் இருக்க என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.. எதாவது ஒரு பிரச்சினை என்றால் சமாளிக்கலாம்.. ஆனால் ட்ரூடோ காலத்தில் கனடாவில் தொட்டதெல்லாம் பிரச்சினையாகவே இருந்துள்ளது. பொருளாதாரம்: அதில் முதலில் பொருளாதாரம்.. கொரோனாவுக்கு பின் கனடா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அங்குப் பணவீக்கம் 8 சதவீதம் வரை கூடப் போனது. அதன் பிறகு எப்படியோ சமாளித்து அதைக் குறைத்தார்கள். அதேபோல வேலைவாய்ப்பின்மையும் அதிகமாக அதாவது சுமார் 6.4 சதவீதமாக இருக்கிறது..
பொருளாதாரம் இப்படி இருக்கும் சூழலில் காற்று மாசை குறைக்கிறேன் என்று கார்பன்-வரியை அவர் கொண்டு வந்தார். இதில் பெட்ரோல், டீசல்ஸ இயற்கை எரிவாயு என அனைத்திற்கும் வரி விதிக்கப்படும். மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்ற அவரது திட்டம் நல்லதுதான் என்றாலும் கொண்டு வந்த நேரம் ரொம்பவே தவறு. ஏற்கனவே பொருளாதார பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த கார்பன் வரி கூடுதல் சுமையாகவே மாறியது. வீட்டுவசதி: அதேபோல கனடா நாட்டு மக்கள் எதிர்கொண்ட மற்றொரு முக்கியமான பிரச்சினை குறைந்த விலைக்கு வீடுகள் கிடைப்பது இல்லை என்பது தான்.
அங்குப் பல முக்கிய நகரங்களில் வாடகை விண்ணை முட்டும் அளவுக்குப் போய்விட்டது. முக்கிய நகரங்களான டொராண்டோ, மாண்ட்ரீல் மற்றும் வான்கூவரில் கனடா மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு வீட்டின் விலை உயர்ந்தது. விலைகள் சுமார் 50% வரை குறைந்தால் மட்டுமே கனடா நாட்டு மக்களால் அங்குச் செல்வது குறித்து யோசிக்க முடியும் என்ற அளவுக்கு உயர்ந்தது.
குடியேற்றம்: அங்கு அடுத்த பிரச்சினை குடியேற்றம். வெளிநாட்டினரின் வருகையால் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற பிரச்சினை அங்குப் பல காலமாகவே இருந்தது. ட்ரூடோ கூட கனடாவின் குடியேற்றக் கொள்கைகளைக் கடுமையாக்குவேன் என்றே தேர்தல் சமயத்தில் கூறினார். ஆனால், அவரது அரசு நேர்மாறான நடவடிக்கையையே எடுத்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 30 லட்சம் வெளிநாட்டவர் கனடாவுக்கு சென்றுள்ளனர். இது அந்நாட்டின் சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளைப் பாதித்தது. இதுதான் கனடா மக்களுக்கு கடும் கோபத்தைக் கொடுத்தது.
சொந்த கட்சியிலேயே மரியாதை இல்லை: அதேபோல அவரது லிபரல் கட்சியில் உட்கட்சி மோதல்களும் தீவிரமடைந்தது. ட்ரூடோ மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த லிபரல் கட்சி தலைவர்கள் அவரை ஓரம்கட்டிவிட்டு, பதவிக்கு வர முயன்றனர். சொந்த கட்சியிலேயே ட்ரூடோவுக்கு எதிரானவர்கள் அதிகம் உருவாகத் தொடங்கினார்கள். மேலும், நடப்பாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய சில மணி நேரத்திற்கு முன்பு அந்நாட்டு நிதியமைச்சரும் ராஜினாமா செய்தார்.
இது கட்சிக்குள் அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதையே காட்டுவதாக இருந்தது. அடுத்தடுத்து வெடித்த சர்ச்சை: இது எல்லாம் போதாது என்று ட்ரூடோவின் இளம் வயது குறித்தும் வரிசையாகப் பல சர்ச்சைகள் வெடித்தது. 2000ம் ஆண்டு அவர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் அத்துமீறியதாக முதலில் புகார் எழுந்தது. அதை அவர் மறுத்தார். இந்தச் சர்ச்சை ஓய்வதற்குள் அவர் இளைஞராக இருந்த போது கறுப்பினத்தவரை அவமதிக்கும் வகையில் மேக்அப் போட்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக அடுத்த சர்ச்சை வெடித்தது.
இப்படித் தொட்டது எல்லாமே ட்ரூடோவுக்கு எதிராகவே போனது. இதனால் மக்கள் கடும் கோபத்தில் இருந்த சூழலில், வேறு வழியில்லாமல் அவர் இப்போது தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். என்னதான் ட்ரூடோ விலகினாலும் கூட, மக்களுக்கு உள்ள கோபத்தை வைத்துப் பார்த்தால் அவரது லிபரல் கட்சி அடுத்தாண்டு கூட தேர்தலில் வெல்வது கடினம்தான்!