மாஸ்கோ: மனிதர்களை நீண்ட நாட்கள் வாழ வைக்கும் பாக்டீரியாவை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாக்டீரியா சுமார் 35 லட்சம் வருடங்களுக்கு முந்தையது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
நீண்ட கால ஆயுள் என்பது எல்ல மனிதர்களும் விருப்பும் ஒன்று. ஆனால் அதற்கான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது புதிய பாட்டீரியாவை ஆய்வாளர்கள் நீண்ட ஆயுளுக்காக பயன்படுத்த முயன்று வருகின்றனர்.
உண்மையில் இது பழைய பாக்டீரியாதான். அதாவது செர்பியா பகுதியில் உறைபனியில் செய்த ஆய்வின்போது இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவரான அனடோலி ப்ரூச்கோவ் இந்த பாக்டீரியாவை கண்டுபிடித்திருந்தார். இதற்கு அவர் 'பேசிலஸ் எஃப்' என்றும் பெயர் வைத்திருந்தார். அப்போது தொடங்கி இப்போது வரை இந்த பாக்டீரியாவை வைத்து பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வந்திருக்கிறார்.
பொதுவாக சாதாரண பாக்டீரியாக்களின் ஆயுட்காலம் வெறும் 12 மணி நேரம்தான். ஆனால் சில பாக்டீரியாக்கள் ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் வரை கூட வாழும் தன்மை கொண்டது. ஆனால், இந்த 'பேசிலஸ் எஃப்' பாக்டீரியா, ஏறத்தாழ 35 லட்சம் ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்திருக்கிறது. அதுவும் உறைபனியிலும், தீவிரமான கதிர்வீச்சு தாக்குதலிலும் பாக்டீரியா உயிர் பிழைத்திருந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் உயிர் பிழைத்திருப்பது எப்படி சாத்தியம் என்பதே விஞ்ஞானிகளின் கேள்வி.
எனவே இந்த பாக்டீரியாவை கொண்டு முதலில் எலிகள் மீது பரிசோதித்திருக்கிறார்கள். பேசிலஸ் எஃப் செலுத்தப்பட்ட எலிகள் மற்ற எலிகளை விட கூடுதல் நாட்கள் உயிர்வாழ்ந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல வயதான எலிகளின் உடலில் இந்த பாக்டீரியாவை செலுத்தும்போது, அது மீண்டும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதை ஆய்வாளர்கள் கவனத்திருக்கிறார்கள். எலிகளை தவிர, பழ ஈக்களின் உடலிலும் இந்த பாக்டீரியாவை செலுத்தி ஆய்வு செய்திருக்கிறார்கள்.
பேசிலஸ் எஃப் செலுத்தப்பட்ட ஈக்கள் மற்ற ஈக்களை விட நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்கின்றன. அதன் நோய் எதிர்ப்பு திறன் மற்ற ஈக்களை காட்டிலும் அதிகரித்திருக்கிறது. இதே பாக்டீரியாவை சில செடிகளில் செலுத்தி சோதித்திருக்கின்றனர். சோதனையில், இந்த செடிகள் செழிப்பாகவும், மற்ற செடிகளை விட கூடுதல் மகசூலையும் கொடுத்திருக்கிறது.
ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு, இந்த பாக்டீரியாவை தன்னுடைய உடலில் ஆய்வாளர் அனடோலி ப்ரூச்கோவ் செலுத்திக்கொண்டிருக்கிறார். அப்போது முதல் இப்போது வரை தான் நன்றாக இருப்பதாவும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இருப்பினும் இவரது உடலை மற்ற ஆய்வாளர்கள் பரிசோதித்தால்தான உண்மை என்ன என்பது தெரிய வரும். ஒருவேளை அனடோலி ப்ரூச்கோவ் எதிர்பார்த்தபடி உடலில் எந்த பெரிய பிரச்னையும் ஏற்படவில்லை என்றால், உன்மையில் மனிதனுக்கு சிரஞ்சீவி என்பது சாத்தியமாகிவிடும்.