இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவே சீனாவிடமிருந்து அதிநவீன 5ம் தலைமுறை போர் விமானத்தை பாகிஸ்தான் வாங்க திட்டமிட்டிருந்தது.
மறுபுறம், துருக்கியிடமிருந்தும் KAAN எனப்படும் அதிநவீன 5ம் தலைமுறை போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் காய் நகர்த்தி வருகிறது. இந்த டீலிங் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் இந்தியாவுக்கும் சிக்கல் இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானின் ஆயுதம் கொள்முதல்: சீனாவிடம் பாகிஸ்தான் நட்பாக இருக்கிறது. இந்த நட்பை பயன்படுத்தி சீனாவின் J-35 எனப்படும் 5ம் தலைமுறை விமானத்தை வாங்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. நவீன் ரேடார் அமைப்பு, எதிரிகளின் ரேடாரிலிருந்து தப்பித்து செயல்படும் தொழில்நுட்பத்தை இந்த விமானம் கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் கூட 5ம் தலைமுறை போர் விமானங்கள் கிடையாது. இப்படி இருக்கையில், பாகிஸ்தான் இந்த விமானத்தை வாங்க முயற்சிகள் மேற்கொள்வது ஆசியாவில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. சீனாவிடம் மட்டுமல்லாது துருக்கியிடமும் விமானங்களை வாங்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த 2021ம் ஆண்டு பாகிஸ்தான்-துருக்கி என இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை போட்டிருந்தன. அதன்படி, இரு நாடுகளும் சேர்ந்து ஆயுதங்களையும், போர் விமானங்களையும் தயாரிக்க தொடங்கின. இப்படி உருவானதுதான் KAAN 5ம் தலைமுறை போர் விமானம்
துருக்கியுடன் டீலங்: KAAN போர் விமானம் அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்திற்கு ஈடாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. மறைந்திருந்து தாக்குதல், அதிநவீன ஆயுதங்களை கொண்டு செல்லுதல் என பல அம்சங்கள் இந்த விமானத்தில் இருக்கிறது. மட்டுமல்லாது நவீன தொழில்நுட்பங்களும் இருப்பதால், போர் களத்தில் இந்த விமானத்தை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் முறையாக இந்த விமானத்தை துருக்கி வெளியில் அறிமுகப்படுத்தியது. மணிக்கு 426 கி.மீ வேகத்தில் சாதாரணமாக பறந்த இந்த விமானம், 8,000 உயரத்தை எட்டியிருந்தது. இந்த விமானத்தின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 2,222 கி.மீ. அதாவது லாகூரில் விமானத்தை எடுத்தால் வெறும் 9-10 நிமிடத்திற்கெல்லாம் டெல்லிக்கு வந்துவிடலாம். ஆனால் டெல்லியிலிருந்து ரஃபேல் விமானத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டால் லாகூர் போக 15 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.
தாலிபான் போரில் முக்கிய திருப்பம்: ஆக பாகிஸ்தானின் இந்த போர் விமானங்கள் கொள்முதல், ஆப்கானிஸ்தான் உடனான மோதலில் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது பாகிஸ்தானில் அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் நடப்பது அனைவரும் அறிந்ததுதான். இதற்கு தாலிபான்கள் ஆதரவுடன் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. இதனையடுத்து கடந்த டிசம்பர் இறுதியில், தங்கள் நாட்டுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் உள்ள பலுச்சிஸ்தான் எனும் பகுதியில் பாக் ராணுவம் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 60க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று ஆப்கானிஸ்தான் விமர்சித்துள்ளது. பதிலுக்கு பாக். ராணுவம் மீது தாக்குதலையும் நடத்தியிருந்தது. இப்படியாக இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்த போரில் பாகிஸ்தான் கொள்முதல் செய்யும் ராணுவ விமானங்கள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.