கடல் படுக்கைக்கு மேல் அமைந்திருக்கும் ரஷ்யாவின் மிக முக்கிய எண்ணெய் கிணறுகளைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய அதிரடித் தாக்குதலில், ரஷ்யாவின் பிரம்மாண்ட எண்ணெய் ஆலை ஒன்று வெடித்துச் சிதறி எரியத் தொடங்கியுள்ளது. (Russian oil rig Caspian Sea)
கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்த விவரங்கள் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இன்று (டிசம்பர் 25) வரை அந்த ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் ரஷ்யப் படைகள் திணறி வருகின்றன. தாக்குதலின் போது அங்கிருந்த தொழிலாளர்கள் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து ரஷ்யா இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. உக்ரைன் ராணுவம் ரஷ்யா மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தாமல், மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டு அந்நாட்டின் ராணுவத் தளங்கள், எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளைத் தகர்த்து வருகிறது. இவை சிறிய ரகத் தாக்குதல்களாகத் தோன்றினாலும், ரஷ்யாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியைச் சிதைப்பதே உக்ரைனின் முக்கிய நோக்கமாகும்.
ரஷ்யாவின் ஒட்டுமொத்த வருமானமும், போர் நிதியும் எண்ணெய் ஏற்றுமதியையே நம்பியுள்ளது. இதனை முடக்குவதன் மூலம், நீண்ட கால அடிப்படையில் ரஷ்யாவால் போரைத் தொடர முடியாத நிதி நெருக்கடியை உருவாக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. ஒரு வகையில் நேட்டோ (NATO) நாடுகள் வகுத்துக் கொடுத்த இந்த வியூகத்தைச் செயல்படுத்த உக்ரைன் தற்போது 1,200 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட Shahed-136/Geran-2 'தற்கொலை ட்ரோன்களை' (Suicide Drones) உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறது.
வெறும் 500 முதல் 900 டாலர் மதிப்பிலான இந்தச் சிறிய ட்ரோன்கள், பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகளை அழித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் உலக நாடுகளுக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது: ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு அதிநவீன ஆயுதங்களை விட, போதுமான அளவு ட்ரோன்கள் இருப்பது அவசியம் என்பதே அது. இதனாலேயே இந்தியா உள்ளிட்ட நாடுகள் தற்போது ட்ரோன் தயாரிப்பில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
