Related Videon on Botton
உலகில் அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்புகள் பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதிகளிலேயே வாழ்கின்றன. இயற்கையாகவே இவை இத்தகைய அதீத விஷத்தைப் பெற்றுள்ளன. இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு; தான் தீண்டிய இரை நீண்ட தூரம் தப்பிச் செல்லாமல், சில நொடிகளிலேயே நிலைகுலைய வேண்டும் என்பதே அதன் நோக்கம். இதற்கு நேர்மாறாக, நீர் பாம்புகளின் விஷம் வீரியம் குறைந்ததாக இருக்கும். ஏனெனில், நீரில் அடிபட்ட இரையைத் துரத்திச் சென்று பிடிக்கும் வேகம் அவற்றுக்கு உண்டு.
ஒரு பிரம்மாண்டமான யானையைக்கூட, ஒருமுறை கடித்தால் வீழ்த்திவிடும் வல்லமை கொண்டது கட்டுவிரியன் பாம்பு. ஆனால், அதே பாம்பின் பல கடிகளை வாங்கினாலும் கீரி உயிர் பிழைப்பது எப்படி? இதில் மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, கீரியின் மின்னல் வேகம். பாம்பின் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வேகம் கீரிக்கு அதிகம் என்பதால், 90% முறை பாம்பு கடிக்கவே முடியாது. இரண்டாவதாக, கீரியின் உடலில் உள்ள 'நிகோடினிக் அசிடைல்கொலின்' (Nicotinic Acetylcholine) ஏற்பிகள், பாம்பின் நரம்பு விஷத்தை உடலில் ஏறவிடாமல் தடுக்கும் எதிர்ப்புத் திறனைப் பெற்றுள்ளன.
மூன்றாவதாக, நாட்டுப்புறக் கதைகளில் கூறப்படும் ஒரு சுவாரசியமான விஷயம் உண்டு. கீரிகள் கூட்டம் கூட்டமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள சில குறிப்பிட்ட மூலிகைச் செடிகளை அவை விஷமுறிப்பு மருந்தாகப் பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது. நரிக்கறவர்கள், கீரியை ஒரு பாம்பு கடிக்கச் செய்து, பின்னர் அது எந்தச் செடியைச் சென்று உண்கிறது என்பதைக் கவனித்து, அந்த மூலிகையைப் பாம்புக் கடிக்கு நாட்டு வைத்தியமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், இது அறிவியல் ரீதியாக முழுமையாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
இயற்கையில் குதிரையின் உடல் அமைப்பு மிகவும் தனித்துவமானது. ஒரு பாம்பு குதிரையைக் கடித்தால், பெரும்பாலான நேரங்களில் அது இறப்பதில்லை. ஏனெனில், குதிரையின் உடலில் பாம்பின் நஞ்சை முறிக்கும் 'ஆன்டி-பாடி' (Antibody) உடனடியாக உருவாகிவிடுகிறது. இந்த அதிசயத் தன்மையை மருத்துவ உலகம் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது. குதிரையின் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த எதிர்ப்புப் புரதங்களைக் கொண்டே, மனிதர்களுக்கான 'ஆன்டி-வீனோம்' (Anti-Venom) எனப்படும் பாம்பு கடி மருந்து ஊசிகள் தயாரிக்கப்படுகின்றன.
