சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் 'கெமிஸ்ட்ரி'யில் கில்லாடிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு அதிரடி கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் (KwaZulu-Natal) பகுதியில் உள்ள ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட கற்கால அம்புகளில், உலகின் மிகப்பழமையான 'விஷத் தடயங்களை' (Toxic residues) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, மனிதர்கள் வேட்டையாடுவதற்கு விஷத்தைப் பயன்படுத்திய வரலாற்றை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியுள்ளது.
இந்த அம்புகளில் தடவப்பட்ட விஷம் 'கிஃப்பால்' (Gifbol) எனப்படும் ஒரு வகை தாவரத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 60,000 ஆண்டுகள் கடந்த பின்பும், அந்த அம்புகளில் உள்ள வேதிப்பொருட்கள் இன்றும் 'Active' ஆக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷம் மனிதர்களுக்கு வாந்தி, மூச்சுத்திணறல் மற்றும் கோமா நிலையைக்கூட ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. சிறிய வகை எலிகளை வெறும் 20 நிமிடங்களில் காலி செய்துவிடும் அளவுக்கு இது செம பவர்ஃபுல்!
இதற்கு முன்னால், சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்புதான் விஷ அம்புகள் பயன்படுத்தப்பட்டதாக ஆதாரங்கள் இருந்தன. ஆனால், ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் மற்றும் ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வு, ஆப்பிரிக்க வேட்டைக்காரர்கள் நுணுக்கமான திட்டமிடல் (Advanced planning) மற்றும் தாவரங்களின் ரசாயன பண்புகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்ததை உறுதிப்படுத்துகிறது. பெரிய மிருகங்களை வேட்டையாடும்போது, அவை தப்பித்து ஓடாமல் இருக்க இந்த விஷத்தைப் பயன்படுத்தி அவற்றை நிலைகுலையச் செய்துள்ளனர்.
இந்த ஆய்வில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், 18-ஆம் நூற்றாண்டில் ஸ்வீடன் பயணிகளால் சேகரிக்கப்பட்ட 250 ஆண்டுகள் பழமையான அம்புகளிலும் இதே தாவர விஷம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 60,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பாரம்பரிய அறிவு, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்துள்ளது வியக்க வைக்கிறது. "இயற்கையின் வேதியியலை (Nature's chemistry) நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு இதுவே சாட்சி" என ஆய்வாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

