"விஜய் கட்சி திமுக - அதிமுகவிற்குச் சமம்!" - மதுரையில் அதிரடி காட்டிய அரசியல் தலைவர்

 



"விஜய் கட்சி திமுக - அதிமுகவிற்குச் சமம்!" - மதுரையில் அதிரடி காட்டிய கிருஷ்ணசாமி: ஜனவரி 7 வரை மௌனம் காத்தது ஏன்?

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் குறித்துக் காரசாரமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அனைத்து மட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். குறிப்பாக, "திமுகவுக்கு மாற்றாக அதிமுக இருக்கக்கூடாது" என்ற கோணத்தில் தனது கட்சியின் 7-வது மாநில மாநாடு அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வதே தனது இலக்கு என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்துப் பேசிய அவர், "திமுக மற்றும் அதிமுகவிற்குச் சமமான ஒரு கட்சியாகவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார். இதுவரை ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என விஜய் மட்டுமே வெளிப்படையாகப் பேசியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த நிலைப்பாட்டில் விஜய் இப்போதும் உறுதியாக இருக்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார். மேலும், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே தற்போது வலுவிழந்துவிட்டதாக அவர் விமர்சித்தார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர் ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டார். அதாவது, விஜய் கட்சியில் இருந்து மிக முக்கியமான நபர் ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார். ஆனால், தவெக தரப்பில் இருந்து "ஜனவரி 7-ஆம் தேதி வரை யாரிடமும் அதிகாரப்பூர்வக் கூட்டணி அறிவிப்புகளை வெளியிடுவதில்லை" எனத் தெரிவிக்கப்பட்டதால், அதுவரை மௌனம் காத்ததாகக் கூறினார். இனி வரும் நாட்களில் தான் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் கூட்டணி குறித்த தெளிவான முடிவுகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதிமுகவுடனான உறவு குறித்துப் பேசிய கிருஷ்ணசாமி, "அதிமுகவுடன் நாங்கள் பிரிந்து செல்லவில்லை, அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது" எனத் தெளிவுபடுத்தினார். எங்களை யார் வெற்றி பெற வைப்பார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்பதே தங்களின் தற்போதைய வியூகம் (Strategy) என அவர் கூறினார். மேலும், வரவிருக்கும் தேர்தல் காசு பணம் இல்லாத நேர்மையான தேர்தலாக நடக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னரே தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


Post a Comment

Previous Post Next Post