900 வீரர்களைக் கொன்று NORWAY இளவரசரைக் காப்பாற்றிய அட்மிரல்: ஒரு ரகசிய வரலாற்றுப் பக்கம் !


 

ராயல் நேவி அட்மிரல் சர் ஜான் கன்னிங்ஹாம் (Sir John Cunningham) என்பவரின் 22 பதக்கங்கள் சமீபத்தில் லண்டனில் 20,000 பவுண்டுகளுக்கு ஏலம் போயின. அப்போதுதான் அவர் 1940-ல் எடுத்த ஒரு கடினமான முடிவு உலகிற்குத் தெரியவந்தது. இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லர் படைகள் நார்வேயை ஆக்கிரமித்த நிலையில், அந்த நாட்டு அரச குடும்பத்தையும், அந்நாட்டின் தங்க இருப்புக்களையும் (Gold Reserves) ரகசியமாக இங்கிலாந்துக்குக் கொண்டு வரும் 'மிஷன்' (Mission) அவருக்கு வழங்கப்பட்டது. எச்.எம்.எஸ் டெவன்ஷைர் (HMS Devonshire) என்ற போர்க்கப்பலில் அவர் நார்வே மன்னர் ஏழாம் ஹாகோனை ஏற்றிச் சென்றபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

அட்மிரல் கன்னிங்ஹாம் பயணித்த கப்பலுக்கு அருகே, சுமார் 50 மைல் தொலைவில் எச்.எம்.எஸ் குளோரியஸ் (HMS Glorious) என்ற விமானம் தாங்கி கப்பல் ஜெர்மனியால் தாக்கப்பட்டது. அங்கிருந்து வந்த அபாயச் சிக்னல் (SOS Signal) கன்னிங்ஹாம் கப்பலுக்கு மட்டுமே கிடைத்தது. கடலில் தத்தளித்த 900 வீரர்கள் தங்களைக் காப்பாற்றும்படி கதறினார்கள். ஆனால், கன்னிங்ஹாமிற்கு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவோ, "எந்தக் காரணத்திற்காகவும் கப்பலின் ரேடியோ மௌனத்தை (Radio Silence) கலைக்கக் கூடாது; நார்வே அரச குடும்பத்தைப் பத்திரமாக இங்கிலாந்து கொண்டு சேர்க்க வேண்டும்" என்பதுதான்.

கடமையா? மனிதாபிமானமா? - மன்னரே வியந்த துணிச்சல்!

தன்னுடன் பயணித்த நார்வே மன்னரிடம் அந்த அபாயச் சிக்னலைக் காண்பித்தார் கன்னிங்ஹாம். மன்னர் அவரிடம், "உங்கள் உத்தரவு என்ன?" என்று கேட்டபோது, "உங்களை இங்கிலாந்துக்கு பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதுதான்" என்று கன்னிங்ஹாம் உறுதியாகப் பதிலளித்தார். தனது கண் முன்னே 900 சக வீரர்கள் நீரில் மூழ்கிச் சாகப்போகிறார்கள் என்று தெரிந்தும், நாட்டின் உத்தரவை மீறாமல் அவர் கப்பலைச் செலுத்தினார். இறுதியில் குளோரியஸ் கப்பலில் இருந்த 900 பேரில் வெறும் 40 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். இந்தச் சம்பவம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இவ்வளவு பெரிய உயிரிழப்புக்குக் காரணமான சிக்னலைப் புறக்கணித்த போதிலும், கன்னிங்ஹாமின் கடமை உணர்வை ராயல் நேவி பாராட்டியது. இதனால் அவரது ராணுவ வாழ்க்கை (Career) பாதிக்கப்படவில்லை. 1943-ல் அவர் மத்திய தரைக்கடல் பகுதியின் ஒட்டுமொத்தப் படைத் தளபதியாக உயர்ந்தார். இத்தாலி மற்றும் பிரான்ஸ் மீதான முக்கியப் போர் நடவடிக்கைகளை வெற்றிகரமாக வழிநடத்தினார். 1946-ல் கடற்படையின் மிக உயர்ந்த பதவியான 'ஃபர்ஸ்ட் சீ லார்டு' (First Sea Lord) பதவியை அடைந்தார். 1953-ல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவிலும் (Coronation) அவர் கௌரவத்தோடு பங்கேற்றார்.

சமீபத்தில் இந்த வீரரின் 22 பதக்கங்கள் ஏலத்திற்கு வந்தபோது, அமெரிக்கத் தனியார் சேகரிப்பாளர் ஒருவர் பெரும் போட்டிக்குப் பின் அவற்றை வாங்கினார். இந்தப் பதக்கங்கள், அட்மிரல் கன்னிங்ஹாம் தனது வாழ்க்கையில் சந்தித்த அந்த ஒரு நிமிட 'தர்மசங்கடமான' முடிவை உலகிற்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளன. தனது மகனையே போரில் இழந்த கன்னிங்ஹாம், 900 வீரர்களின் தியாகத்தை மனதில் சுமந்தபடியே தனது இறுதி நாட்கள் வரை வாழ்ந்து முடித்தார். ஒரு ராணுவ அதிகாரி தனது கடமைக்காக எத்தகைய உயர்ந்த விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.




Post a Comment

Previous Post Next Post