ILFORD-ல் மனைவியை கொன்று கார் டிக்கியில் போட்டு Air-India பிடித்து டெல்லி சென்ற பங்கஜ்


லண்டனின் கோர்பி (Corby) பகுதியில் வசித்து வந்த 24 வயது இளம்பெண் ஹர்ஷிதா பிரெல்லா, கடந்த நவம்பர் மாதம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கிழக்கு லண்டனின் ILFORD பகுதியில் ஒரு Vauxhall Corsa காரின் பின் பகுதியில் (Boot) இருந்து மீட்கப்பட்டது.

ஹர்ஷிதாவின் கணவன் பங்கஜ் லம்பா (Pankaj Lamba), தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, சடலத்தை காரில் மறைத்து வைத்துவிட்டு அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்தியாவிற்குத் தப்பியோடியுள்ளார். இந்தச் சர்வதேசத் தேடுதல் வேட்டையில் (International manhunt) தற்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹர்ஷிதாவைத் திருமணம் செய்வதற்கு முன்பே பங்கஜ் லம்பாவிற்கு மது பாண்டே (Madhu Pandey) என்ற பெண்ணுடன் நீண்ட காலமாகக் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கொலையைச் செய்த சில மணி நேரங்களிலேயே, இந்தியாவில் உள்ள தனது காதலி மதுவைத் தொடர்பு கொண்ட பங்கஜ், "என்னுடன் வாழத் தயாராக இரு" என்று கூறியுள்ளார். ஹர்ஷிதாவின் சடலம் போலீசாரால் கண்டறியப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, பங்கஜ் லண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்குத் தப்பிச் சென்றுள்ளார். அங்கு தனது பழைய காதலி மற்றும் அவரது 11 வயது மகளுடன் மீண்டும் இணைந்து, குர்கான் பகுதியில் ஒரு சிறிய வாடகைப் வீட்டில் ரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தக் கொலையின் பின்னணியில் மிகப்பெரிய பணமோசடி (Financial abuse) இருப்பதைக் கண்டுபிடித்துள்ள புலனாய்வாளர்கள், ஹர்ஷிதா கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை பங்கஜ் வலுக்கட்டாயமாகப் பறித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தனது திருமண வாழ்க்கையின் போதே, ஹர்ஷிதாவின் சேமிப்புப் பணத்தைத் தனது இந்தியக் காதலிக்கு பங்கஜ் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் ஹர்ஷிதா தனது கணவனுக்கு எதிராக குடும்ப வன்முறை (Domestic abuse) புகாரைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. பங்கஜ் தன்னைப் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், தனது வங்கிக் கணக்குகளைக் கட்டுப்படுத்துவதாகவும் ஹர்ஷிதா கைப்பட எழுதிய புகார் கடிதம் தற்போது ஆதாரமாகக் கிடைத்துள்ளது.

பங்கஜ் லம்பாவைத் தேடி சர்வதேச போலீஸ் (Interpol) மற்றும் லண்டன் போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியிருந்த நிலையிலும், அவர் குர்கான் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பல மாதங்களாகத் தலைமறைவாக இருந்துள்ளார். ஒரு சிறிய அறையில் தனது காதலியுடன் சாதாரணமானவர் போல (Hiding in plain sight) வாழ்ந்து வந்த அவரை உள்ளூர் வாசிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்திய மற்றும் லண்டன் காவல்துறையினர் இணைந்து தற்போது அவரைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் லண்டன் மற்றும் இந்தியாவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post