Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

கேமராவால் வந்த வினை: ஏவுகணைத் தாக்குதலைப் படம்பிடித்த 70 பிரித்தானியர்கள் கைது!

 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தங்களது அலைபேசிகளில் படம்பிடித்த சுமார் 70 பிரித்தானியப் பிரஜைகள் ஐக்கிய அரபு அமீரகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுற்றுலாப் பயணிகள், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் அடங்குவதாக 'Daily Mail' செய்தி வெளியிட்டுள்ளது. அமீரகத்தின் கடுமையான இணையவழிக் குற்றச் சட்டங்களின் கீழ் (Cybercrime Laws), நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுப்பது மற்றும் பகிர்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சம்பவம் நடந்த இடங்களுக்கு அருகே நின்றிருந்த நபர்களின் அலைபேசிகளைப் பரிசோதித்த பொலிஸார், அதில் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான பதிவுகள் இருந்ததைக் கண்டு அவர்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சில சுற்றுலாப் பயணிகள் அந்த வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பகிராமல், குடும்பத்தினருக்கு மட்டும் அனுப்பியிருந்தாலும் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் லண்டனைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவரும் அடங்குவார். அவர் பொலிஸார் கேட்டவுடன் வீடியோவை அழித்துவிட்ட போதிலும், 'பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்' என்ற பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கைது செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 2,00,000 பவுண்டுகள் (சுமார் 2.5 லட்சம் டாலர்) வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது அவர்கள் நெரிசலான சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்குப் போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் மறுக்கப்படுவதாகவும் 'Detained in Dubai' என்ற மனித உரிமை அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. "இவர்கள் குற்றவாளிகள் அல்ல, தெரியாமல் தவறு செய்த சாதாரணப் பயணிகள்" என்று அந்த அமைப்பின் தலைவர் ராதா ஸ்டிர்லிங் (Radha Stirling) தெரிவித்துள்ளார்.

அமீரக அரசு இந்த விவகாரத்தில் மிகவும் கடுமையாக உள்ளது. தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், நாட்டின் பாதுகாப்பைப் பேணவும் இத்தகைய சட்டங்கள் அவசியம் என்று அந்நாட்டுத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாகப் பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், பல வெளிநாட்டவர்கள் இதனைப் பொருட்படுத்தாமல் படம்பிடித்ததே இந்தக் கைதுகளுக்குக் காரணமாகும். பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது இராஜதந்திர ரீதியாகத் தலையிட்டு, தங்களது பிரஜைகளை விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Share this news: Back to Home