ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா (Diego Garcia) ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20, 2026) இரண்டு நீண்ட தூர ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது. சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தத் தளத்தைக் குறிவைத்ததன் மூலம், ஈரான் இதுவரை மறைத்து வைத்திருந்த தனது ஏவுகணை வலிமையை உலகிற்கு நிரூபித்துள்ளது. ஈரானின் ஏவுகணைகள் 2,000 கி.மீ தூரம் மட்டுமே பாயும் என்று மேற்கத்திய நாடுகள் முன்பு கணித்திருந்த நிலையில், தற்போது 4,000 கி.மீ தூரத்திலுள்ள இலக்கைக் குறிவைத்தது பாதுகாப்பு வல்லுநர்களைத் திடுக்கிடச் செய்துள்ளது.
டீகோ கார்சியா மீதான இந்தத் தாக்குதலுக்கு ஈரான் தனது 'சிமோர்க்' (Simorgh) விண்வெளி ஆராய்ச்சி ராக்கெட் அல்லது மேம்படுத்தப்பட்ட 'கோர்ரம்ஷாஹர்-4' (Khorramshahr-4) ஏவுகணையைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பப் பயன்படும் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) ஈரான் தயாரித்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை சந்தேகித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் ஈரானால் மிக எளிதாக லண்டன், பாரிஸ், பெர்லின் மற்றும் ரோம் போன்ற முக்கிய ஐரோப்பியத் தலைநகரங்களைத் துல்லியமாகத் தாக்க முடியும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரிட்டன் தனது தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்ததே ஈரானின் இந்த ஆக்ரோஷமான நகர்வுக்குக் காரணமாகும். "பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் போருக்குத் துணை நின்றால், அவர்களது நகரங்கள் பாதுகாப்பாக இருக்காது" என்று ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனியின் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர். ஈரானிடம் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ள நிலையில், அதில் சில ஆயிரம் கிலோமீட்டர்கள் பாயும் திறன் கொண்ட 'செஜ்ஜில்' (Sejjil) மற்றும் 'எமாட்' (Emad) போன்ற ஏவுகணைகள் ஐரோப்பாவின் பாதுகாப்பு வளையங்களை (Air Defense) மீறித் தாக்கும் வல்லமை கொண்டவை எனக் கூறப்படுகிறது.
தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் தளங்கள் உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டீகோ கார்சியா மீது ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை அமெரிக்கக் கடற்படை 'எஸ்.எம்-3' (SM-3) இடைமறிப்பு ஏவுகணை மூலம் அழித்த போதிலும், மற்றொரு ஏவுகணை தொழில்நுட்பக் கோளாறால் கடலில் விழுந்தது. இந்தச் சம்பவம் போரின் எல்லையை மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா மற்றும் இந்தியப் பெருங்கடல் வரை விரிவுபடுத்தியுள்ளது. ஈரானின் நீண்ட தூர ஏவுகணை மிரட்டலைச் சமாளிக்க நேட்டோ (NATO) நாடுகள் ஒரு புதிய கூட்டுப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
