அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் அருகே உள்ள ஸ்பிரிங் (Spring) பகுதியில், மார்ச் 21, 2026 அன்று மாலை ஒரு விண்கல் குடியிருப்பு ஒன்றின் கூரையைத் துளைத்துக்கொண்டு வீட்டிற்குள் விழுந்துள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் ஷெர்ரி ஜேம்ஸ் (Sherrie James) என்பவர் தனது பேரன் மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது, திடீரென ஒரு பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு பெரிய பொருள் வீட்டின் மீது விழுந்தது போன்ற சத்தம் கேட்டவுடன் ஓடிச் சென்று பார்த்தபோது, அவரது மகளின் படுக்கையறையில் கூரையில் ஒரு பெரிய ஓட்டையும், தரை மற்றும் சுவர்களில் சேதமும் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்தத் விண்கல் தாக்கத்திற்குச் சற்று முன்பாக, டெக்சாஸ் வான்பரப்பில் ஒரு பிரகாசமான 'நெருப்புப் பந்து' (Fireball) தோன்றி மறைந்ததை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்துள்ளனர். வான்வெளியில் இருந்து அதிவேகமாக வந்த அந்த விண்கல், வளிமண்டலத்தில் உராய்ந்து தீப்பிடித்ததால் வானத்தில் பச்சை நிற வெளிச்சம் தோன்றியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கரும்புகை மற்றும் இடி முழக்கம் போன்ற பயங்கர சத்தம் (Sonic Boom) கேட்டது. இந்தச் சத்தம் சுமார் 26 டன் டிஎன்டி (TNT) வெடிபொருள் வெடித்ததற்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தியதாக நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது.
நாசாவின் தகவல்படி, இந்த விண்கல் சுமார் 1 டன் எடையும், 3 அடி விட்டமும் கொண்ட ஒரு விண்வெளிப் பாறையாகும். இது மணிக்கு சுமார் 35,000 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, நிலப்பரப்பிற்கு 29 மைல் உயரத்திற்கு மேலே துண்டு துண்டாகச் சிதறியுள்ளது. அவ்வாறு சிதறிய துண்டுகளில் ஒன்றுதான் ஷெர்ரி ஜேம்ஸின் வீட்டின் மீது விழுந்துள்ளது. ஒரு கால்பந்து அளவிலான அந்த விண்கல் கருப்பு நிறத்தில் கருகிய நிலையில் காணப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
டெக்சாஸ் பகுதியில் இது போன்ற விண்கல் தாக்குதல்கள் அரிதானவை என்றாலும், கடந்த சில நாட்களில் அமெரிக்காவின் மற்ற பகுதிகளிலும் இது போன்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்த விண்கல்லை ஆய்வுக்காகப் பெற்றுக்கொள்ள விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். "நான் முதலில் ஏதோ விமானத்தில் இருந்து விழுந்த பொருள் என்றுதான் நினைத்தேன், ஆனால் இது ஒரு விண்கல் என்பதை அறிந்து வியப்படைகிறேன்" என்று ஷெர்ரி ஜேம்ஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தற்போது அந்த விண்கல் துண்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
