குவைத் நாட்டின் மின்சாரம், நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இன்று (மார்ச் 30, 2026) அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானியப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு சேவை மையம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தப் மோதலில் உயிரிழக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது எட்டாக (8) உயர்ந்துள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாகக் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபரின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும், அவரது உடலை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும் குவைத் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தூதரகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. இருப்பினும், புது தில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) இதுவரை இந்தச் சம்பவம் குறித்து விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவினர் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு நிலை குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 5-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், குவைத் மீது மட்டும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வீசப்பட்டுள்ளதாகக் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் போன்ற பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை முடக்கும் வகையில் ஈரான் இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
