மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குவோம் என்றும். அதனால் அங்கே வேலை செய்யும் அனைத்து அமெரிக்கர்களும் உடனடியாக தாங்கள் தங்கி இருக்கும் நாடுகளை விட்டு வெளியேறவேண்டும் என்றும் ஈரான் கெடு விதித்துள்ளது. இதனால் மேலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பல ஆயிரம் இடங்களை , அமெரிக்கா இஸ்ரேல் குறி வைத்து தாக்கி அழித்ததாக கூறினாலும், இன்றுவரை ஈரான், ஏவுகணைகளை ஏவி வருவதும், இந்த மிரட்டலை நேரடியாக விடுத்திருப்பதும் , பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்க்காலச் சூழல் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC), வளைகுடா நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பகுதிகள் விரைவில் ஈரானின் தாக்குதல் இலக்குகளாக மாற்றப்படும் என அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான 'செபா நியூஸ்' வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் என்விடியா போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் ஈரானின் இலக்கு பட்டியலில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் விமான நிலையம் மற்றும் புஜைரா எண்ணெய் முனையம் ஆகியவற்றின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலால் துபாய் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4' (Operation True Promise 4) திட்டத்தின் கீழ் இத்தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லெபனானில் இருந்து சுமார் 8 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்த மூன்று வாரங்களுக்குத் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட ஈரான் பகுதிகளில் குண்டுவீச்சு தொடரும் என இஸ்ரேல் சூசகமாகத் தெரிவித்துள்ளது. இந்த மோதலால் இதுவரை ஈரானில் 1,300-க்கும் மேற்பட்டோரும், லெபனானில் 800-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியைப் (Strait of Hormuz) பாதுகாக்கவும், அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றவும் நேட்டோ நாடுகள் உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதற்கு உதவாத பட்சத்தில் நேட்டோ அமைப்பிற்கு 'மிக மோசமான' எதிர்காலம் காத்திருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். இருப்பினும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்கத் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தி வருகிறது.
