எப்ஸ்டீன் வழக்கில் அமெரிக்கா அதிரடி முடிவு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு $72.5 மில்லியன் இழப்பீடு!
By kayal | 29 March
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வங்கியான 'பேங்க் ஆஃப் அமெரிக்கா', மறைந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனின் பாலியல் குற்றங்களுக்கு நிதியுதவி மற்றும் வங்கிச் சேவைகள் மூலம் உதவியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சமரசம் செய்துகொள்ள முன்வந்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 27, 2026) நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாக 72.5 மில்லியன் டாலர்களை (சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல்) வழங்க வங்கி சம்மதித்துள்ளது.எப்ஸ்டீனின் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை வங்கி கண்டும் காணாமல் இருந்ததே இந்தத் தொகைக்கு முக்கியக் காரணமாகும்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெட் ராகோஃப் (Jed Rakoff), இந்தச் சமரசத் திட்டத்திற்கு இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர்கள் இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர். எப்ஸ்டீன் தனது பாலியல் தொழிலுக்காகப் பெண்களைக் கடத்துவதற்கும் அவர்களுக்குப் பணம் கொடுப்பதற்கும் 'பேங்க் ஆஃப் அமெரிக்கா' கணக்குகளைப் பயன்படுத்தியதாகப் புகாரில் கூறப்பட்டிருந்தது.குறிப்பாக, 2011 முதல் 2019 வரை எப்ஸ்டீனிடம் சிக்கித் தவித்த ரஷ்யப் பெண் ஒருவருக்கு இந்த வங்கியின் மூலமே மாதந்தோறும் வாடகை மற்றும் செலவுக்கான பணம் அனுப்பப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமானது.
இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்ட போதிலும், தான் எந்தவிதமான குற்றத்தையும் செய்யவில்லை என்றும், எப்ஸ்டீனின் பாலியல் கடத்தலுக்குத் தான் உதவவில்லை என்றும் வங்கி நிர்வாகம் பிடிவாதமாகத் தெரிவித்து வருகிறது. "வழக்கை முடிவுக்குக் கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வை வழங்கவுமே இந்தச் சமரசம் செய்யப்பட்டுள்ளது" என்று வங்கியின் செய்தித் தொடர்பாளர் பில் ஹால்டின் கூறியுள்ளார். முன்னதாக, இதே விவகாரத்தில் ஜே.பி. மோர்கன் (JPMorgan) வங்கி 290 மில்லியன் டாலர்களையும், டாய்ச் வங்கி (Deutsche Bank) 75 மில்லியன் டாலர்களையும் அபராதமாகச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பின் மூலம், 2008 முதல் 2019 வரை எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நிதி உதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மார்ச் 28-ஆம் தேதியான இன்று, வங்கியின் இந்தச் சமரசம் 'நீதி நோக்கிய பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்' எனப் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். எப்ஸ்டீன் 2019-இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட போதிலும், அவருக்கு உதவியாக இருந்த பெரும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஒவ்வொன்றாக இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கி வருகின்றன.