தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் புட்டுமாயோ (Putumayo) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லெகிசாமோ (Puerto Leguizamo) விமான நிலையத்திலிருந்து 125 பேருடன் புறப்பட்ட இராணுவத்திற்குச் சொந்தமான சி-130 ஹெர்குலஸ் (C-130 Hercules) விமானம், ஓடுபாதையிலிருந்து எழும்பிய சில நிமிடங்களிலேயே தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 66 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் 11 விமானப்படை வீரர்கள் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் அடங்குவர். எஞ்சிய 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நிகழ்வதற்குச் சில நொடிகள் முன்னதாக, விமானம் ஓடுபாதையின் இறுதியில் மோதி, பின் மரத்தில் மோதி செங்குத்தாகக் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளை கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விபத்தின் போது விமானத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததால் மீட்புப் பணியில் பெரும் சவால்கள் ஏற்பட்டன. உள்ளூர் மக்கள் காயமடைந்த வீரர்களைத் தங்களது மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி முதலுதவிக்காக அழைத்துச் சென்ற காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன.
இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அதிபர் பெட்ரோ, இராணுவத்தின் பழைய விமானப் படைகளைப் புதுப்பிப்பதில் நிலவும் நிர்வாகத் தாமதங்களே இத்தகைய விபத்துக்களுக்குக் காரணம் எனச் சாடியுள்ளார். "நமது இளைஞர்களின் உயிர் பணையத்தில் உள்ளது, இதில் மெத்தனமாக இருக்கும் அதிகாரிகள் உடனடியாக நீக்கப்படுவார்கள்" என்று அவர் எச்சரித்துள்ளார். விபத்துக்குள்ளான சி-130 ஹெர்குலஸ் விமானம் 1960-களில் தயாரிக்கப்பட்ட பழமையான மாடல் என்பதும், அது அமெரிக்காவால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது விபத்து நடந்த இடத்தில் கருப்புப் பெட்டியை (Black Box) மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விமான இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே சமயம், அந்தப் பகுதியில் செயல்படும் கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதல் ஏதும் இதில் இல்லை என்பதையும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கொலம்பியா வரலாற்றில் மிக மோசமான இராணுவ விமான விபத்தாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்தால் நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
