ஈரானின் உச்ச தலைவர் ஆயத்தொல்லா அலி கொமேனி கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று இஸ்ரேலின் துல்லியமான வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் சொந்த சிசிடிவி (CCTV) கேமரா நெட்வொர்க்கையே இஸ்ரேல் ஹேக் செய்து பயன்படுத்தியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெஹ்ரான் நகரின் போக்குவரத்து கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு கேமராக்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த இஸ்ரேலிய உளவுத்துறை, அதன் மூலம் கொமேனியின் நடமாட்டத்தைத் துல்லியமாகக் கண்காணித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், ரஷ்ய அதிபர் புதினை கடும் அதிர்ச்சிக்கும் பீதிக்கும் உள்ளாக்கியுள்ளது.
தற்போது ரஷ்யாவிலும் இதேபோன்ற உளவு வேலைகள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதும் புதின், தலைநகர் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மொபைல் இன்டர்நெட் சேவையைத் துண்டித்துள்ளார். குறிப்பாக, பெல்கொரோட் மற்றும் குர்ஸ்க் போன்ற எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளைப் பெறுவதில் கூட மக்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. "பாதுகாப்பு காரணங்களுக்காக" இந்த முடக்கம் செய்யப்படுவதாகக் கிரெம்ளின் கூறினாலும், மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதைத் தடுக்கவும், வெளிநாட்டு உளவு அமைப்புகள் கேமராக்களை ஹேக் செய்வதைத் தவிர்க்கவுமே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய "ஒயிட் லிஸ்ட்" (White List) முறையின்படி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில இணையதளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த முடியும். டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முழுமையான மொபைல் இன்டர்நெட் பிளாக்அவுட் (Blackout) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாக்ஸி முன்பதிவு, ஆன்லைன் வங்கிச் சேவைகள் மற்றும் அன்றாட வணிகப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாஸ்கோ நகரில் மட்டும் கடந்த சில நாட்களில் சுமார் 5 பில்லியன் ரூபிள் அளவிற்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதினின் இந்த 'டிஜிட்டல் இரும்புத் திரை' நடவடிக்கை, ரஷ்ய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போதிய தகவல் தொடர்பு இல்லாததால் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் குறித்து மக்கள் முன்கூட்டியே அறிய முடியாமல் போவதாகவும், இது உயிரிழப்புகளை அதிகரிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கொமேனியின் படுகொலைக்குப் பிறகு தனது உயிருக்கும் ஆபத்து வரலாம் எனப் பயப்படும் புதின், தொழில்நுட்பத்தையே முடக்குவதன் மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய முயல்வது, ரஷ்யாவை ஒரு டிஜிட்டல் சிறைச்சாலையாக மாற்றி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.