எதிர்காலத்தில் நிலவு அல்லது செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறினால், அங்கு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை காண விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின்படி, புவிஈர்ப்பு விசை இல்லாத (Zero Gravity) சூழலில் மனித விந்தணுக்கள் தங்களது இலக்கை நோக்கிச் செல்லும் திசையை அறியாமல் குழப்பமடைவதாகத் தெரியவந்துள்ளது. பூமியில் புவிஈர்ப்பு விசையின் உதவியுடன் கருமுட்டையை நோக்கி நீந்திச் செல்லும் விந்தணுக்கள், விண்வெளியில் 'திறனற்று' போவதாகவும், இதனால் இயற்கை முறையில் கருத்தரிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
பெயினின் பார்சிலோனாவில் உள்ள டெக்சியஸ் (Dexeus) மருத்துவமனை மற்றும் கேட்டலோனியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், விண்வெளி போன்ற நுண் ஈர்ப்பு (Microgravity) சூழலில் விந்தணுக்களின் வேகம் மற்றும் உயிர்வாழும் திறன் கணிசமாகக் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, விந்தணுக்கள் நேர்க்கோட்டில் செல்வதற்குப் பதிலாக வட்டமிடுவதாகவும் அல்லது திசைமாறிச் செல்வதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். "விந்தணுக்களின் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், அவற்றின் 'வழிநடத்தும் திறன்' (Navigation) பாதிக்கப்படுவது கருத்தரிப்பதற்கான வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது" என்று இந்த ஆய்வை முன்னின்று நடத்திய மருத்துவர் மான்செராட் போடா தெரிவித்துள்ளார்.
விந்தணுக்களின் தடுமாற்றம் மட்டுமின்றி, விண்வெளியில் இருக்கும் அதிகப்படியான கதிரியக்க வீச்சு (Space Radiation) வளரும் கருவின் டிஎன்ஏ-வை (DNA) பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. இதனால் விண்வெளியில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் அங்கு தங்கியிருக்கும்போது, அவர்களது இனப்பெருக்க மண்டலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதும் இந்தச் சிக்கலைத் தீவிரப்படுத்துகிறது. எனவே, இயற்கை முறையை விட 'செயற்கை கருத்தரிப்பு' (IVF) முறையே விண்வெளிக்குச் சிறந்ததாக இருக்கலாம் எனச் சில விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர்.
இந்தச் சவால்களைச் சமாளிக்க 'ஸ்பேஸ்பார்ன் யுனைடெட்' (SpaceBorn United) போன்ற நிறுவனங்கள் விண்வெளியிலேயே கருத்தரிப்பு மற்றும் கரு வளர்ச்சியை மேற்கொள்ளும் மினியேச்சர் ஐவிஎஃப் (Mini IVF) கருவிகளை உருவாக்கி வருகின்றன. இருப்பினும், மனித இனம் பூமியைத் தாண்டி மற்ற கிரகங்களில் நிலைத்திருக்க வேண்டுமானால், இந்த 'ஈர்ப்பு விசை' தொடர்பான சிக்கலுக்குத் தீர்வுகாண வேண்டியது அவசியமாகும். இப்போதைக்கு "விண்வெளியில் குழந்தைகள்" என்பது வெறும் கனவாகவே இருக்கும் என்றும், இன்னும் பல தசாப்த கால ஆய்வுகளுக்குப் பிறகே இது குறித்த தெளிவான முடிவு எட்டப்படும் என்றும் விண்வெளி மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.