Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

நாம் மூன்றாம் உலகப் போருக்குள் நுழைகிறோம்: பேரழிவை உண்டாக்கும் போகும் அமெரிக்க ஊடுருவல் !

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள பிரிட்டிஷ் ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சர் பேட்ரிக் சாண்டர்ஸ் (General Sir Patrick Sanders), நாம் ஏற்கனவே 'மூன்றாம் உலகப் போரின்' (WW3) வாசலில் நிற்பதாக எச்சரித்துள்ளார். "ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா தரைப்படை ஆக்கிரமிப்பைத் தொடங்கினால், அது ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறாகவும், கற்பனை செய்ய முடியாத உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தும் பேரழிவாகவும் முடியும்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), ஈரானைத் தாக்க அமெரிக்காவிற்குத் தனது நாட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ள நிலையில், பிரிட்டனுக்குள்ளேயே இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈராக் போரின் போது அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது போன்றதொரு 'வரலாற்றுத் தவறை' பிரிட்டன் மீண்டும் செய்யக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரமி கார்பின் உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர். ஹார்முஸ் நீரிணை என்பது குறுகிய மற்றும் ஆழமற்ற நீர்நிலைகளைக் கொண்டது என்பதால், அங்கு அமெரிக்கக் கப்பல்கள் நுழைந்தால் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கு அவை எளிதான இலக்குகளாகிவிடும் என ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஈரான் தரப்போ, அமெரிக்கா தனது மண்ணில் கால் வைத்தால் சுமார் 10 லட்சம் வீரர்களைத் திரட்டி 'தற்கொலைப்படை' தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை (Kharg Island) அமெரிக்கா கைப்பற்ற முயன்றால், அங்குள்ள ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) மூலம் ஈரானின் பல பகுதிகள் சிதைக்கப்பட்டாலும், ஹார்முஸ் நீரிணையை மூடி உலகப் பொருளாதாரத்தை முடக்கும் வலிமை ஈரானிடம் இன்னும் இருப்பதாகவே உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஹார்முஸ் நீரிணையில் 150-க்கும் மேற்பட்ட எண்ணெய் டாங்கர் கப்பல்கள் தேங்கிக் கிடப்பதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் ஈரானை அடிபணிய வைக்க ட்ரம்ப் கெடு விதித்துள்ள போதிலும், பிரிட்டன் போன்ற நட்பு நாடுகளின் எச்சரிக்கைகள் அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஒருவேளை இந்த ஆக்கிரமிப்பு தொடங்கப்பட்டால், அது ஈரான் - அமெரிக்கா இடையிலான நேரடிப் போராக மட்டுமின்றி, ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையுமே சுடுகாடாக மாற்றும் ஆபத்து இருப்பதாகப் பன்னாட்டுச் சமூகம் கவலை தெரிவிக்கிறது.

Share this news: Back to Home