மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரிட்டிஷ் படைகள் மீது, போர் தொடங்கிய பிறகு ஈரான் நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை (Blitz) ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) வெற்றிகரமாக முறியடித்துள்ளது. திங்கட்கிழமை இரவு (மார்ச் 23, 2026) ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 14 ஈரானிய தற்கொலை ட்ரோன்களை, பிரிட்டிஷ் ராணுவத்தின் எலைட் 'ராயல் ஏர் ஃபோர்ஸ் ரெஜிமென்ட்' (RAF Regiment) வீரர்கள் தரைவழி வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தினர். இஸ்ரேல், சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள நட்பு நாடுகளின் இலக்குகளை நோக்கிப் பாய்ந்து வந்த இந்த ட்ரோன்களை, துல்லியமான தாக்குதல் மூலம் தடுத்து நிறுத்தியதாகப் பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி (John Healey) உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விளக்கிய ஜான் ஹீலி, கடந்த நான்கு வாரங்களில் மட்டும் பிரிட்டிஷ் விமானிகள் சுமார் 900 மணி நேரம் வான் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த 14 ட்ரோன்களில் 13-ஐ தரைப்படை வீரர்களும், ஒன்றை அதிநவீன டைபூன் (Typhoon) போர் விமானமும் வீழ்த்தியுள்ளன. குறிப்பாக, குறைந்த உயரத்தில் பறந்து வந்து தாக்கும் ஈரானின் 'ஷாஹெட்' (Shahed) ரக ட்ரோன்களைக் கண்டறிந்து அழிப்பதில் உக்ரைன் போரில் பெற்ற அனுபவத்தைப் பிரிட்டிஷ் வீரர்கள் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரிட்டனின் 'HMS Dragon' போர்வாங்கி சைப்ரஸ் பகுதிக்கு விரைந்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறி 5 நாள் போர் இடைநிறுத்தத்தை அறிவித்திருந்த போதிலும், களத்தில் மோதல்கள் குறையவில்லை என்பதையே இந்தத் தாக்குதல் காட்டுகிறது. ஈரானின் புரட்சிகரக் காவல்படை (IRGC), அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தனது ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. பிரிட்டன் நேரடிப் போரில் ஈடுபடவில்லை என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறி வந்தாலும், தற்போது தற்காப்பு நடவடிக்கைகளுக்காகப் பிரிட்டன் தனது முழு பலத்தையும் மத்திய கிழக்கில் இறக்கியுள்ளது.இந்தத் தாக்குதலால் பிரிட்டன் வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் 3 லட்சம் பிரிட்டிஷ் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து லண்டனில் கவலை அதிகரித்துள்ளது.
சைப்ரஸில் உள்ள அகரோதிரி (RAF Akrotiri) தளம் ஏற்கனவே ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அங்கு கூடுதல் பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஈரானின் இந்த 'மெகா ட்ரோன்' தாக்குதல் முறியடிக்கப்பட்டது, பிரிட்டனின் வான் பாதுகாப்புத் தொழில்நுட்பத்திற்கு ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால், பிரிட்டன் இன்னும் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
