உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில், கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் நோக்கில் ஈரான் குறைந்தது 12 அதிநவீன கடலடி கண்ணிவெடிகளைப் (Naval Mines) புதைத்துள்ளதாக அமெரிக்காவின் சி.பி.எஸ் (CBS) செய்தி நிறுவனம் மற்றும் பிரிட்டன் உளவுத்துறைகள் தெரிவித்துள்ளன.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் 'ஆக்கப்பூர்வமான' பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதனால் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்குத் தள்ளி வைப்பதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், ஈரானிய ராணுவத் தளபதி அலி அப்துல்லாஹி அலியாபாடி இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார். "நாங்கள் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை; ட்ரம்ப் தோல்வி பயத்தில் பொய்களைப் பரப்புகிறார்" என்று அவர் சாடியுள்ளார். மேலும், "முழுமையான வெற்றி (Complete Victory) கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்" என்று ஈரான் அரசு ஊடகங்கள் வாயிலாக அவர் சூளுரைத்துள்ளார்.
மறுபுறம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைச் சிதைக்கும் வரை தங்களது தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்று கூறியுள்ளார். "ட்ரம்ப் 5 நாள் அவகாசம் கொடுத்திருக்கலாம், ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களுக்காக நாங்கள் ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தளங்கள் மீது தொடர்ந்து தாக்குவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, பெய்ரூட் மற்றும் தெற்கு இஸ்ரேலில் இன்றும் கடும் குண்டுவீச்சுகள் நீடிக்கின்றன. அமெரிக்கா கூடுதலாக ஆயிரக்கணக்கான வீரர்களை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி வருவதால், போர் தணிவதற்குப் பதிலாக மேலும் தீவிரமடைந்து வருகிறது.
இந்தத் தொடர் மோதல்களால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது.
