மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், 12 வயது நிரம்பிய சிறுவர்களும் போர்க்கால ஆதரவுப் பணிகளில் (War support roles) இணையலாம் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.
"தன்னார்வத்துடன் முன்வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் விருப்பத்தை ஏற்று வயது வரம்பைக் குறைத்துள்ளோம்" என்று ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 18 வயதுக்குட்பட்டோரை ராணுவப் பணிகளில் ஈடுபடுத்துவது 'குழந்தை உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை'க்கு (CRC) எதிரானது என்று ஐநா சபை எச்சரித்துள்ளது.
ஈரானிய ராணுவம் மற்றும் ஐஆர்ஜிசி இடையே நிலவும் மோதல் மற்றும் வீரர்களின் பற்றாக்குறை காரணமாகவே இத்தகைய விபரீத முடிவை ஈரான் எடுத்துள்ளதாக ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஈரானின் முன்னணி வீரர்களில் பலர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாலும், பலர் ராணுவத்திலிருந்து வெளியேறியதாலும் (Desertion) ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்பச் சிறுவர்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 12 மற்றும் 13 வயது சிறுவர்கள் சீருடை அணிந்து சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்படுவது, அவர்களை எதிரி நாடுகளின் இலக்குகளாக மாற்றக்கூடும் எனப் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
யுனிசெஃப் (UNICEF) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026-ல் தொடங்கிய இந்தப் போரில் இதுவரை ஈரானில் மட்டும் சுமார் 180 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
