நியூ மெக்சிகோ மாகாண அரசு மெட்டா நிறுவனத்திற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், நேற்று (மார்ச் 24, 2026) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து மெட்டா நிறுவனம் தவறான தகவல்களைத் தந்து பயனர்களை ஏமாற்றியதாக 12 பேர் கொண்ட நடுவர் குழு (Jury) உறுதி செய்தது. குறிப்பாக, இந்தச் சமூக வலைதளங்கள் பாலியல் குற்றவாளிகளின் "வேட்டைக்காடாக" (Breeding ground) மாறியுள்ளதை அறிந்திருந்தும், லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மெட்டா நிறுவனம் மெத்தனமாகச் செயல்பட்டதாக அரசுத் தரப்பு முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக, சுமார் 75,000 விதிமீறல்களுக்காக மெட்டாவுக்கு $375 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூ மெக்சிகோ அட்டர்னி ஜெனரல் ரவுல் டோரஸ் (Raul Torrez) தலைமையிலான குழு, 2023-ல் நடத்திய ரகசிய விசாரணையின் (Operation MetaPhile) அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப் போலப் போலி கணக்குகளை உருவாக்கி அவர்கள் நடத்திய சோதனையில், சில நிமிடங்களிலேயே அந்தக் கணக்குகளுக்குப் பாலியல் ரீதியான செய்திகளும், புகைப்படங்களும் வந்ததைக் கண்டறிந்தனர். இது குறித்து மெட்டாவிடம் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனச் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், சிறுவர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அல்காரிதம்கள், அவர்களைப் பாலியல் வேட்டைக்காரர்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கின்றன என்பதும் விசாரணையில் அம்பலமானது.
இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மெட்டா நிறுவன செய்தித் தொடர்பாளர், "நாங்கள் இந்தத் தீர்ப்பை ஏற்கவில்லை; மேல்முறையீடு செய்யப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளார். தங்கள் தளங்களில் சிறுவர்களைப் பாதுகாக்கப் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை ஏற்கனவே செய்துள்ளதாக மெட்டா வாதிட்டது. ஆனால், மெட்டா நிறுவனத்தின் உள் மின்னஞ்சல்களில், ஒரு நாளைக்குச் சுமார் 5 லட்சம் சிறுவர்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்று அந்நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளரே எச்சரித்தும், உயர் அதிகாரிகள் அதைக் கண்டு கொள்ளவில்லை என்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மெட்டாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின
இந்தத் தீர்ப்பு, மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின் பிற மாகாணங்களில் நிலுவையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. வரும் மே மாதம் நடைபெற உள்ள அடுத்தகட்ட விசாரணையில், மெட்டா நிறுவனம் தனது அல்காரிதம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது குறித்து நீதிபதி உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்களின் லாபத்திற்காகச் சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைப் பலிகடா ஆக்குவதை இனி அனுமதிக்க முடியாது என்பதற்கான எச்சரிக்கையாகவே இந்த ₹3,100 கோடி அபராதம் பார்க்கப்படுகிறது.