அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. பகுதியில் அமைந்துள்ள 'ஜாயின்ட் பேஸ் அனகோஸ்டியா-போலிங்' (Joint Base Anacostia-Bolling) ராணுவ தளத்தின் வான்பரப்பில் கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத மர்ம ட்ரோன்கள் பறந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ராணுவ தளம் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை முகமைகளின் முக்கிய அலுவலகங்களைக் கொண்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். அங்கு மர்மமான முறையில் டிரோன்கள் அத்துமீறி நுழைந்திருப்பது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மற்றும் வெளியுறவுச் செயலாளருக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த ட்ரோன்கள் எங்கிருந்து வருகின்றன, அவற்றை இயக்குவது யார் என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவான தகவலும் கிடைக்கவில்லை. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ட்ரோன்கள், ராணுவ தளத்தின் நடமாட்டங்களைக் கண்காணிக்கும் நோக்கில் உளவு பார்க்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் எப்.பி.ஐ (FBI) மற்றும் பென்டகன் அதிகாரிகள் இது குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வாஷிங்டன் வான்பரப்பில் டிரோன்கள் பறக்க கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இவ்வளவு பாதுகாப்பான பகுதிக்குள் அவை நுழைந்தது பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அமெரிக்காவின் பல்வேறு ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி நிலையங்களுக்கு அருகே இது போன்ற மர்ம ட்ரோன்கள் தென்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது வெள்ளை மாளிகையை அதிருப்தி அடையச் செய்துள்ளது. வெளிநாட்டு உளவு அமைப்புகள் அல்லது உள்நாட்டிலேயே இருக்கும் விஷமிகள் யாரேனும் இந்தத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வாஷிங்டன் டி.சி. மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய ராணுவ தளங்களில் வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் (Air Defense) பலப்படுத்தப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத ட்ரோன்களைக் கண்டால் உடனடியாக சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மர்ம ட்ரோன் விவகாரம் அமெரிக்க அரசியலிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
