உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, ரஷ்யா சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வடகொரியத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கட்டுமானத் துறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை, சுமார் 16 மணி நேரம் இடைவிடாது வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஆண்டிற்கு 364 நாட்கள் உழைக்கும் இவர்களுக்கு, அனைத்துப் பிடித்தங்களும் போகக் கையில் கிடைக்கும் மாதச் சம்பளம் வெறும் 10 டாலர் (சுமார் ₹830) மட்டுமே என 'குளோபல் ரைட்ஸ் காம்ப்ளையன்ஸ்' (GRC) அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் ஈட்டும் வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை வடகொரிய அரசே 'விசுவாசக் கட்டணம்' என்ற பெயரில் பறிமுதல் செய்துகொள்கிறது.
இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மிக மோசமாக உள்ளது. இவர்கள் எவ்வித வெப்ப வசதியும் இல்லாத, நெரிசலான கப்பல் கண்டெய்னர்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கண்டெய்னர்கள் முழுவதும் மூட்டைப் பூச்சிகள் மற்றும் கரையான்கள் நிறைந்துள்ளதாகவும், தொழிலாளர்கள் தரையில் படுத்து உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். மிகக் கொடுமையாக, இந்தத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. போதிய சுகாதார வசதிகள் இல்லாததால், இவர்கள் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.
வடகொரியப் பாதுகாப்பு முகவர்களின் கடுமையான கண்காணிப்பில் இருக்கும் இவர்களுக்கு எவ்வித சுதந்திரமும் கிடையாது. ரஷ்யா வந்தவுடன் இவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, இவர்கள் தப்பிச் செல்லாதவாறு கண்காணிக்கப்படுகிறார்கள். குடும்பத்தை வடகொரியாவில் விட்டுவிட்டு வந்தவர்கள் என்பதால், அங்கிருக்கும் அவர்களது உறவினர்களைக் காட்டி மிரட்டியே இவர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். எவரேனும் உடல்நிலை சரியில்லாமல் வேலை செய்ய மறுத்தால், அவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்படுவதாகவும், ஒரு தொழிலாளி அடி தாங்க முடியாமல் இரண்டு வாரங்கள் வேலைக்கே செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் தடையையும் மீறி, ரஷ்யா இத்தகைய நவீன கால அடிமை முறையை ஊக்குவித்து வருவது சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. வடகொரியா இத்தகைய தொழிலாளர்கள் மூலம் ஆண்டுக்குச் சுமார் 500 மில்லியன் டாலர் அந்நியச் செலாவணியை ஈட்டி, அதனைத் தனது ஏவுகணை மற்றும் அணுஆயுதத் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. "மாடுகளை விடக் கேவலமான வாழ்க்கை" என்று இந்தத் தொழிலாளர்கள் தங்களது நிலையை விவரித்துள்ளனர். இந்தப் போர்ச் சூழலில் ரஷ்யாவின் பொருளாதாரம் இத்தகைய சுரண்டல்கள் மூலமே தாங்கிப் பிடிக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.