Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

ஈரானைத் தொடர்ந்து அடுத்த இலக்கு கியூபா : ட்ரம்ப் உளறிய ரகசியம் - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

புளோரிடா மாகாணம் மியாமியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று (மார்ச் 27) உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது அரசாங்கத்தின் ராணுவ வெற்றிகள் குறித்துப் பெருமிதமாகப் பேசினார். அப்போது, "நான் ஒரு வலிமையான ராணுவத்தைக் கட்டமைத்தேன்; அதை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று நினைத்தேன், ஆனால் சில நேரங்களில் பயன்படுத்த வேண்டியுள்ளது. வெனிசுலா மற்றும் ஈரானைத் தொடர்ந்து அடுத்த இலக்கு கியூபா (Cuba is next)" என்று சட்டெனக் கூறிவிட்டார். அடுத்த சில நொடிகளிலேயே தனது தவறை உணர்ந்த அவர், "தயவுசெய்து நான் இதைச் சொல்லவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்; ஊடகங்களே, அந்த வாசகத்தை மட்டும் தவிர்த்துவிடுங்கள்" என்று நகைச்சுவை கலந்த தொனியில் வேண்டுகோள் விடுத்தார்.

ட்ரம்பின் இந்த 'உளறல்' வெறும் தற்செயலானது அல்ல என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கடத்தியதில் இருந்தே, கியூபா மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. வெனிசுலாவில் இருந்து கியூபாவுக்கு வந்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதால், அந்த நாடு தற்போது மிக மோசமான மின்சாரத் தட்டுப்பாட்டையும் பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. கியூபாவின் கம்யூனிச அரசு விரைவில் வீழும் என்று ட்ரம்ப் ஏற்கனவே பலமுறை கூறி வந்த நிலையில், தற்போது "அடுத்த இலக்கு" என்று அவர் குறிப்பிட்டிருப்பது தரைப்போர் மூளும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio), கியூபாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என்று சமீபத்தில் ஜி7 (G7) நாடுகளின் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார். ஈரானுடன் தற்போது நடைபெற்று வரும் போர் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்காவின் முழு கவனமும் கியூபா பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. "நாங்கள் ஈரானில் கவனமாக இருக்கிறோம், ஆனால் கியூபா எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் சரணடையத் தயாராக உள்ளது" என்று ட்ரம்ப் தனது பேச்சின் போது மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்புக்குக் கியூபா அதிபர் மிகுயேல் டயஸ்-கனெல் (Miguel Diaz-Canel) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கியூபா ராணுவம் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் தயாராக இருந்தும் இத்தகைய மிரட்டல்கள் வருவது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரானில் போர் உச்சத்தில் இருக்கும் வேளையில், கியூபா மீது ட்ரம்ப் காட்டும் இந்தத் ஆர்வம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ட்ரம்பின் இந்த 'ரகசிய கசிவு' உண்மையில் ஒரு திட்டமிடப்பட்ட உளவியல் போராகவே பார்க்கப்படுகிறது.

Share this news: Back to Home