அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களை "விசித்திரமானவர்கள்" (Strange) என்று கடுமையாகச் சாடியுள்ளார். அவர்கள் ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற தொனியில் 'இறுதித் தாக்குதல்' குறித்து எச்சரித்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது மிகப்பெரிய அளவிலான குண்டுவீச்சு (Massive Bombing) நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் தரைப்படை வீரர்களை (Ground Forces) ஈரானுக்குள் இறக்கவும் தயங்கப்போவதில்லை என்றும் அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சுமார் 7,000 முதல் 8,000 வரையிலான அமெரிக்க வீரர்கள், குறிப்பாக 82-வது ஏர்மிபார்ன் டிவிஷன் மற்றும் கடற்படையின் மரைன் வீரர்கள் மத்திய கிழக்கில் தஹ்ரான் எல்லையை ஒட்டி நிலைகொண்டுள்ளனர். ஈரானின் எண்ணெய் வளத்தின் இதயமாகக் கருதப்படும் 'கார்க் தீவு' (Kharg Island) ஏற்கனவே அமெரிக்காவின் குண்டுவீச்சால் 90 சதவீதம் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள எரிசக்தி நிலையங்களையும் தகர்க்க ட்ரம்ப் 5 நாள் காலக்கெடு விதித்துள்ளார். இந்த காலக்கெடு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் எந்த நேரத்திலும் ஈரானுக்குள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
மறுபுறம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த 'இறுதித் தாக்குதல்' திட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முளையிலேயே கிள்ளியெறிய இதுவே சரியான தருணம் என்று அவர் கருதுகிறார். ஆனால், ஈரான் தனது பிடிவாதத்தைக் தளர்த்திக் கொள்ளவில்லை.
இந்த மோதல் போக்கினால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஐநா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தப் போரை நிறுத்தப் போராடினாலும், ட்ரம்ப் தனது 'அதிகபட்ச அழுத்தம்' (Maximum Pressure) என்ற கொள்கையிலிருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை.
