பிரிட்டன் கப்பல்கள் 'பொம்மைகள்': ட்ரம்ப் கடும் கிண்டல் - போருக்குப் பின் உதவி தேவையில்லை எனத் திட்டவட்டம்!
By kayal | 27 March
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களில் நேட்டோ (NATO) நாடுகளின் பங்களிப்பு குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார்.அப்போது பிரிட்டனின் 'எச்.எம்.எஸ் குயின் எலிசபெத்' மற்றும் 'எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்' ஆகிய இரண்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களை "பொம்மைகள்" (Toys) என்று அவர் கிண்டல் செய்தார்.அமெரிக்காவிடம் உள்ள பிரம்மாண்டமான போர்க்கப்பல்களுடன் ஒப்பிடுகையில் பிரிட்டனின் கப்பல்கள் மிகவும் தரம் குறைந்தவை என்றும், போர்க்களத்தில் அவற்றால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பே பிரிட்டனிடம் உதவி கோரப்பட்டதாகவும், ஆனால் அப்போது அவர்கள் பின்வாங்கியதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்."பிரிட்டன் இப்போது வந்து 'நாங்கள் கப்பல்களை அனுப்புகிறோம்' என்று கூறுகிறது. ஆனால், 'போர் முடிந்த பிறகு நாங்கள் கப்பல்களை அனுப்புவோம்' என்று அவர்கள் சொல்வது போல் உள்ளது" என அவர் கேலியாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், "ரொம்ப நன்றி, ஆனால் இப்போது சிரமப்பட வேண்டாம் (Don't bother), எங்களுக்கு உங்கள் உதவி தேவையில்லை" என்று முகத்திலடித்தாற்போல பிரிட்டனிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், தொடக்கத்தில் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குத் தங்களது நாட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததே ட்ரம்ப்பின் இந்த ஆத்திரத்திற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. ஸ்டார்மர் ஒரு "வின்ஸ்டன் சர்ச்சில்" அல்ல என்றும் ட்ரம்ப் முன்னதாக விமர்சித்திருந்தார். பிரிட்டன் தனது நாட்டின் பாதுகாப்பு நலன்கருதி நிதானமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறினாலும், ட்ரம்ப் அதனை ஒரு பலவீனமான செயலாகவே பார்க்கிறார். நேட்டோ நாடுகள் அமெரிக்காவின் நிழலில் இருந்துகொண்டு, ஆபத்துக் காலத்தில் உதவ மறுப்பதாக அவர் மீண்டும் ஒருமுறை சாடியுள்ளார்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்காவுடனான தங்களது 'சிறப்பு உறவு' (Special Relationship) இப்போதும் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே பிரிட்டன் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. ட்ரம்ப்பின் இந்த "பொம்மை கப்பல்" என்ற விமர்சனம் பிரிட்டன் ராணுவ வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா தனது போரைத் தனித்தே வெல்லும் வல்லமை படைத்தது என்பதை நிரூபிக்க ட்ரம்ப் முனைப்பு காட்டி வருகிறார்.